search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onion"

    • விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
    • மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி நிபந்தனைகளின் அடிப்படையில் அரசின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • பெரிய வெங்காயத்தின் விலை ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
    • பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது.

    போரூர்:

    மிச்சாங் புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கோவக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விலையும் அதிகரித்து உள்ளது.

    இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது 50 சதவீத வெங்காயம் மட்டுமே வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பெரிய வெங்காயம் விலை ரூ.50-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

    சில்லரை விற்பனை கடை களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.

    கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, புயல், மழை காரணமாக ஆந்திரா பகுதியில் இருந்து வரும் காய்கறி, வெங்காயம் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து உள்ளது. பெரிய வெங்காயம் வழக்கத்தை விட பாதி அளவே வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தாமதமானதால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த மாத இறுதியில் திடீரென பாதியாக குறைந்தது.

    இதனால் வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் அதன் விலை சரிந்து இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்து.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளிமார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சமையலுக்கு பெரிய வெங்காயத்தை பயன்படுத்துவரை குறைத்து உள்ளனர். இதேபோல் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.110 வரையிலும் விற்கப்படுகிறது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை(கிலோவில்) வருமாறு :- தக்காளி-ரூ.22, பீன்ஸ் - ரூ.70, அவரைக்காய்- ரூ.40, உஜாலா கத்தரிக்காய்-ரூ.17, வெண்டைக்காய்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.30, ஊட்டி பீட்ரூட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.70, பன்னீர் பாகற்காய்- ரூ25, புடலங்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.50, முட்டை கோஸ்-ரூ.6 பச்சை மிளகாய்- ரூ30 இஞ்சி- ரூ.100.

    • மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
    • 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரபி குறுவை கால தோட்டப்பயிரான மரவள்ளி, வெங்காயம், கத்திரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இதற்காக அறிவிக்கை செய்யப்பட்ட சின்னசேலம், நயினார்பாளையம், இந்திலி, வடக்கநந்தல், ஆலத்தூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், நாகலூர், அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, சங்கரா புரம், சேராப்பட்டு, திருக்கோவிலூர், திருப்பா லப்பந்தல், ஆவிகொளப் பாக்கம், எறையூர், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திரு நாவலூர், எலவனாசூர் கோட்டை, வெள்ளிமலை, களமருதூர், மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.

    மேலும், தலா ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ.909.17 மற்றும் கத்திரி ரூ.817.51 தொகையை வரும் ஜனவரி மாதம் 31- ந் தேதிக்குள்ளும், மரவள்ளி ரூ.1,517.51 தொகையை வரும் பிப்ரவரி மாதம் 29- ந் தேதிக்குள்ளும் செலுத்தி விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எதிர்பா ராத திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது வழக்கத்தை விட 50 சதவீதம் பயிரின் மகசூல் குறைந்தி ருந்தால் காப்பீடு தொகை வழங்கப்படும். அறுவடை முடிந்த பின் 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அடங்கல், இ-அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை உச்சம் அடைந்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.80வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    • சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது.
    • கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை உயர்வு பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளிலும் எதிரொலித்தது. இதனை தொடர்ந்து தக்காளியின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் கவனம் விலை உயர்ந்த வெங்காயத்தின் பக்கம் திரும்பி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதுடன், வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க இருப்பதால், வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளை மட்டும் அல்லாது இல்லத்தரசிகளையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்திருப்பது மட்டுமல்லாது, தனது சேமிப்பில் உள்ள வெங்காயத்தை மொத்தச் சந்தையில் விடுவித்து சில்லறை விலையைக் குறைக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் தாராளமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது.

    நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.42 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. வெளிசந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் பண்டிகை காலத்தில் இதுபோன்று விலை உயர்ந்து, தேவையான அளவு வெங்காயத்தை வாங்க முடியாததால் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேட்டில் உள்ள வெங்காயம் விற்பனையாளர்கள் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் டன் வெங்காய வரத்து இருந்து வந்ததால் விலையும் சீராக இருந்தது. தற்போது திடீரென வெங்காய வரத்து குறைந்துவிட்டது. இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிர மாநிலத்தில் முறையாக பெய்யாததால், காரிப் பருவத்தில் (ஜூலை - ஆகஸ்டு) வெங்காயம் நடவு நடைபெறவில்லை. அதனால் அக்டோபர் மாதம் வெங்காய அறுவடை நடைபெறாததால், கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை விடுவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்த சில தினங்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது.
    • கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை,

    கோவையின் புறநகர் பகுதிகளில் தக்காளி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவற்றை வியாபாரிகள் சந்தைக்கு கொண்டுவந்து ஏலமுறையில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் வெளி மாவட்டம்-மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கோவை தியாகி குமரன் காய்-கனி சந்தையில் தற்போது காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    இங்கு கடந்த சில நாட்களுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது. அது தற்போது கிலோவுக்கு ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது. தரத்துக்கு ஏற்ப விலையும் மாறுபடுகிறது. இதனால் சில்லரை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 வரை விற்பனையாகிறது.மேலும் காய்கறிகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை): தக்காளி- ரூ.15 (10), வெண்டை-ரூ.40 (30), கத்தரிக்காய்-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.90 (60), சின்னவெங்காயம்-ரூ.80 (40), பெரிய வெங்காயம்-ரூ.30, உருளைகிழங்கு-ரூ.25, சேனை-ரூ.60, சிறுகி ழங்கு-ரூ.80, இஞ்சி-ரூ.100, சேம்பு-ரூ.70, காளிபிளவர்-ரூ.35 (30), பீன்ஸ்-ரூ.60 (80), எலுமிச்சை-ரூ.80 (100), புடலை-ரூ.30 (40), பீர்க்கங்காய்-ரூ.40 (50), சீனிஅவரை-ரூ.30, அவரை-ரூ.40, பூசணி-ரூ.15.

    • சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுவதால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.
    • சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில் தரகு மண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்தும், வேடசந்தூர், குஜிலியம்பாறை, அய்யலூர், எரியோடு, கோவிலூர், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    சாம்பார் காய் எனப்படும் சின்ன வெங்காயம் காரம் அதிகம் உள்ளதால் வீட்டு சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை திடீர் உச்சமடைந்தது. மொத்த மார்க்கெட்டில் 3 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட. நிலையில் கிலோ ரூ. 90க்கு விற்கப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.

    திண்டுக்கல் சில்லறை கடைகளில் மூன்று தரங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது புது காய்களின் வரத்து அறவே இல்லாத நிலையில் பட்டறை காய் எனப்படும் பழைய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால் திடீர் விலையேற்றம் உள்ளது. இதுவும் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உச்சத்தை தொடும். தற்போது கிலோ ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது என்று சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    • 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
    • சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார். அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.

    • வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது
    • வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

    புதுடெல்லி:

    வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக கடந்த மாதம் மத்திய அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்தது.

    அதன் தொடர்ச்சியாக வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கூடுதல் கொள்முதல் இலக்கை அடைய இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சில்லரை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்தைகளை குறிவைத்து, இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவிப்பது தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 டன் வெங்காயம் இலக்கு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

    முக்கிய சந்தைகளில் வெளியிடுவதை தவிர, இருப்பிலிருந்து வெங்காயம் சில்லரை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ.25 என்ற மானிய விலையில் 21-ந்தேதி முதல் (அதாவது இன்று முதல்) சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்கும்.

    வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×