என் மலர்
நீங்கள் தேடியது "Pilgrims"
- அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.
- தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
டெல்லி - ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில், கான்வர் யாத்ரீகர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவுக்கு திங்கள்கிழமை (ஜூலை 7) இரவு உணவில் வெங்காயம் பரிமாறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புர்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபலௌடா புறவழிச்சாலை அருகே செயல்பட்டு வந்த ஒரு சாலையோர தாபாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உணவில் வெங்காயம் கலந்திருந்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கடை உரிமையாளருடன் வாக்குவாதம் செய்து, அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பக்தர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது.
- சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோவிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற மூன்று கோவில்களுக்கு செல்வதுதான் சார் தாம் யாத்திரை.
இந்த சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. அதன் பின்னர் நேற்றைய தேதி வரை சார் தாம் யாத்திரைக்கு யாத்ரீகர்களின் வருகையின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், " முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சார் தாம் யாத்திரையில் வரும் பக்தர்களின் சுமூகமான தரிசனத்திற்காக உத்தரகாண்ட் காவல்துறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நேற்று மே 18ம் தேதி வரை, சார் தாம் யாத்திரையில் சென்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது " என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
- ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஜாகர் கோட்லி அருகில் விபத்தில் சிக்கியது.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஜம்முவின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்களில் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அம்ரித்சரில் இருந்து கிளம்பிய பேருந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜாகர் கோட்லி எனும் இடத்தில் விபத்தில் சிக்கியது. இங்கிருந்து வைஷ்ணவ தேவி கோவில் இருக்கும் காத்ரா 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. வைஷ்ணவ தேவி பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கான ஆரம்ப பகுதி ஆகும்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, காவல் துறை மற்றும் இதர மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதோடு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
"பத்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். பேருந்து அம்ரித்சரில் இருந்து கிளம்பி காத்ராவுக்கு சென்று கொண்டிருந்த போது காஜர் கோட்லி அருகே பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஜம்முவின் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். 12 பேர் உள்ளூர் பொது சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என்று ஜம்முவின் துணை ஆணையர் அவ்னி லவசா தெரிவித்துள்ளார்.
- அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்.
- கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள்பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் செல்கின்றனர். அவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளை மறுநாள் தை 1-ந்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா.
- பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
நாகர்கோவில்:
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.
காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர். இரணியல் சுற்று வட்டார பகுதி, மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டன.
அந்த வகையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.
இதுபோல் வடக்கன் பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னர் திரும்பி கோவில் வந்தடைந்தது.
தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு காவடிகள் வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. மேலும் சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடிகள் சேரமங்கலம், படர்நிலம், பிள்ளையார்கோவில் மணவாளக்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.
குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள், வேல் காவடிகள், குளச்சல் அண்ணா சிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக திருச்செந்தூர் சென்றன.
மேலும் குளச்சல் புளியமூட்டு விளைமுத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 பெரிய காவடிகளும், 6 சிறுவர் காவடிகளும், சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தபடியும் சென்றனர்.
செக்காலத் தெரு முத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 அடி வேல் காவடி, காவடியும், கள்ளியடப்பு கோவிலில் இருந்து பறக்கும் காவடியும், நுழக்குடி சிவன் கோவில் இருந்து பறக்கும் காவடியும், மகாதேவர் கோவிலில் இருந்து பறக்கும் காவடியும் புறப்பட்டு சென்றன.
- சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.
இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.
இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.
மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
- கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.
இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
- ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதல்.
- தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது.
- பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனி அடிவார பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றது.
மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முகூர்த்த நாள் என்பதால் அடிவாரம் திருமண மண்டபங்களில் நடைபெற்ற விஷேசசத்திற்கு ஏராளமான வாகனங்கள் வந்தன.
மேலும் பக்தர்களின் வாகனங்களும் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.
- மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது.
உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்ணும், அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
இந்நிலையில் கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையின் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதார்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்தனர்.
மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கேதார்நாத்தில் சிக்கித்தவிக்கும் 150 முதல் 200 யாத்ரீகர்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும், மேக வெடிப்பைத் தொடர்ந்து இதுவரை எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெறுகிறது.
- பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்ல ஏற்பாடு.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.
தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு தேவசம்போர்டில் இருந்து இத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும்.
- விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
தாராபுரம்:
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடு துறையை சேர்ந்த 80 பக்தர்கள் நேற்று பழனிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை வழியாக வரப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் தாறுமாறாக ஓடி பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பவானியை சேர்ந்த ராமன் (வயது 54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ் ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய சாரதி,சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்காமல் இருக்க பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒளிரும் ஸ்டிக்கர் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் சிலர் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.






