என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நொய்யல் ஆற்றில் கொட்டப்படும் பெரிய வெங்காயம்
- லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பழங்கள், வெங்காயம், காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து உள்ளார்கள்.
வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வைத்துள்ளவர்கள், மளிகை கடை வியாபாரிகள் மூட்டை மூட்டையாக வாங்கி திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது திருப்பூருக்கு கர்நாடகா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து டன் கணக்கில் லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் விற்பனை சூடு பிடிக்கும் என நினைத்த வியாபாரிகள் விற்பனை மந்தமாக காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.
மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் தரம் வெங்காயம் விலை குறைந்தாலும் அதிகளவில் விற்பனை நடைபெறவில்லை. வடமாநிலங்களில் இருந்து பல லாரிகளில் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சேமித்து வைக்கும் குடோன்களில் வெங்காயங்கள் நிரம்பி வழிந்து மேலும் சேமிக்க இடமில்லாததால் தேக்கம் அடைந்துள்ளது.
மேலும் பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது. இதன் காரணமாக அழுகும் நிலையில் இருந்த பெரிய வெங்காயங்களை தென்னம்பாளையம் மார்க்கெட் அருகில் ஓடும் நொய்யல் ஆற்றின் கரையோரம் மூட்டை மூட்டையாக வியாபாரிகள் வேதனையுடன் வீசிச்சென்றனர்.
மேலும் இருப்பு வைக்க இடமில்லாததால் வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் மேலும் பெரிய வெங்காய மூட்டைகள் அழுகுமோ என்ற அச்சத்திலும், கலக்கத்திலும் மொத்த வியாபாரிகள் உள்ளனர்.






