என் மலர்
பெண்கள் உலகம்
- வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
- காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
* வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும்.
* புதினா சட்னி செய்யும் பொழுது சிறிது வேர்க்கடலை வறுத்து போட்டு செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.
* கசகசா, முந்திரி சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து குருமாவில் சேர்த்தால் எந்த குருமாவாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.
* புளி சாதம், எலுமிச்சை சாதம் முதலியவை செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் வாசனை தூக்கும்.
* வெறும் வாணலியில் அவலை வறுத்து அரைத்து, அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
* மோருடன் சிறிது இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.
* ஆப்பம் சுடும் பொழுது அந்த மாவில் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொண்டால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.
* பிரியாணிக்கு சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.
* வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
* காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
* கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கெட்டி தயிரை கலந்தால் கத்திரிக்காய் கறுப்பாகாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.
* பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது கடைசியில் பொட்டு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.
* உளுந்து வடைக்கு மிக்சியில் அரைக்கும் பொழுது மிக்சி ஜாரில் சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு அரைத்தால் மிக்சியை எளிதில் கழுவி விடலாம்.
* பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் அதன் காரம் குறையும்.
* முறுக்கு, தட்டை, சீடை போன்ற பலகாரங்கள் செய்யும் பொழுது அரிசி மாவை முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்பு பலகாரம் செய்தால் மொறுமொறுப்பு கூடுவதுடன் ருசியும் அபாரமாக கிடைக்கும்.
* இட்லி பொடி செய்யும்போது கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு அதனுடன் கொள்ளு பருப்பையும் சிறிது சேர்த்தால் பொடி சுவையாக இருப்பதுடன் கெட்ட கொழுப்பும் குறையும்.
* பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை லேசாக வறுத்து விட்டு பின்பு பாயசம் செய்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.
- ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
- தினமும் 50 முறை குதித்து அன்றைய நாளை தொடங்குவது உடலுக்கு புத்துயிர் அளிக்கும்.
தினமும் எளிதாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, குதிப்பது. 'ஜம்பிங் ஜாக்ஸ்' என்று அழைக்கப்படும் இது, இதயத்துக்கும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் சிறந்த, எளிய பயிற்சி வடிவமாகும். தினமும் காலையில் 50 முறை இந்த குதிக்கும் பயிற்சியை தொடர்ந்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
எலும்புகளை வலிமையாக்கும்
குதிக்கும்போது உடலிலுள்ள பல தசைகளின் செயல்பாடுகள் தூண்டப்படும். குறிப்பாக கால்கள், கைகள், தொடை உள்ளிட்ட தசை பகுதிகளின் இயக்கம் ஒருங்கிணைக்கப்படும். தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்த உதவும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும். குதிக்கும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது நீண்டகால எலும்பு ஆரோக்கியத்திற்கு வித்திடும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
இதய தசைகளை வலுப்படுத்தும்
குதிக்கும் பயிற்சியில் ஈடுபடும்போது இதய துடிப்பு அதிகரிக்கும். அதனால் ரத்த ஓட்டம் மேம்படும். இதய தசைகள் நெகிழ்வடையும். இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வது இதயம் திறம்பட செயல்பட உதவிடும். இதய நோய் அபாயமும் குறையும்.
மன நிலையை மேம்படுத்தும்
தினமும் 50 முறையோ அல்லது அதற்கு மேலோ குதிக்கும் வழக்கத்தை பின்பற்றுவது எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இது மனதுக்கு நல்ல உணர்வுகளை தரும் ஹார்மோன் என்பதால் மன நிலையை மேம்படுத்தும். மன அழுத்தம் குறைவதற்கு வழிவகுக்கும். கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்யும்.
உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்
உடற்பயிற்சி கண்ணோட்டத்தில் தினமும் 50 முறை குதிக்கும் பயிற்சி செய்வது உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். அதேவேளையில், சமச்சீரான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உடல் ஆற்றலை அதிகரிக்கவும் இந்த பயிற்சி உதவிடும்.
என்ன நடக்கும்?
இந்த எளிய பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது இதயம், தசைகள், எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும். தினமும் 50 முறை குதித்து அன்றைய நாளை தொடங்குவது உடலுக்கு புத்துயிர் அளிக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக உணரக்கூடும்.
எப்படி குதிப்பது?
குதிக்கும்போது முதலில் நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். அப்போது கைகள் இரண்டும் இருபுறமும் தொடைப்பகுதியை தொட்டிருக்க வேண்டும். பின்பு இரு கால்களையும் சற்று அகலமாக விலக்கி வைக்க வேண்டும். அப்போது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கைகூப்பியபடி நிற்க வேண்டும்.
பின்பு கைகளை தளர்த்தி தொடை பகுதியையொட்டி வைக்க வேண்டும். அப்போது கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்த நிலைக்கு கொண்டு வந்து இயல்புக்கு திருப்ப வேண்டும். பின்பு கால்களை அகலமாக விலக்கியும், கைகளை உயர்த்தியும் மீண்டும் இயல்புக்கு திரும்புவதுமாக பயிற்சி செய்ய வேண்டும்.
- கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
- கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இவை இரண்டும் சுவையான, ஆரோக்கியமான காய்கறிகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இயற்கையான இனிப்புச்சுவை கொண்ட இந்த இரண்டு வேர் காய்கறிகளும் எளிதாக சமைப்பதற்கும், ருசிப்பதற்கும் ஏற்றவை. கண் பார்வையை மேம்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும் 'ஆரோக்கிய சக்தி மையங்களாக' இவை கருதப்படுகின்றன. இருப்பினும் கண்களுக்கும், இதயத்துக்கும் இவை வழங்கும் நன்மைகள் வேறுபடுகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோமா?
கண் ஆரோக்கியம் காக்கும்
கேரட், கண் ஆரோக்கியம் காக்கும் பிரபலமான காய்கறியாக அறியப்படுகிறது. இதில் இருக்கும் அதிக அளவிலான பீட்டா-கரோட்டின் வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவிடும். கண் பார்வை திறனுக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. அதன் ஆரஞ்சு நிறமே அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.
கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இரவு நேர பார்வையிழப்பு தன்மை ஏற்படுவதை தடுப்பதிலும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறப்புற்று விளங்குகிறது. குறிப்பாக உணவில் வைட்டமின் ஏ குறைவாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வது சிறந்தது.
கண் செல்களை பாதுகாக்கும்
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் கண் செல்களின் சேதத்தை தடுக்க உதவுகின்றன. கேரட்டில் லூட்டின், ஜியாசாந்தின் போன்ற சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு வகைகளில், ஆந்தோசியானின் அதிகம் உள்ளன. அவை நீண்ட கால கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்த அழுத்தத்தை காக்கும்
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம், உடலில் அதிகமாக சேரும் சோடியத்தை சமநிலைப்படுத்தக்கூடியது. அதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவிடும். கேரட்டிலும் பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னிலை வகிக்கிறது.
கொழுப்பை கட்டுப்படுத்தும்
கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். செரிமான மண்டலத்தில் சேமித்துவைத்து, ஆரோக்கியமான கொழுப்பை தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யும்.
அழற்சியை குறைக்கும்
இதய நோய்கள் ஏற்படுவதற்கு அழற்சி முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளும் அழற்சியால் ஏற்படும் சேதங்களை தடுக்க துணைபுரிகின்றன.
ரத்த நாளங்களை பாதுகாக்கும்
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரண்டும் ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படாமல் காக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். கேரட் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைக்க வித்திடும்.
சாப்பிட எது எளிது?
கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். எங்கும் எடுத்து சென்று எப்போதும் சாப்பிடலாம் என்பதால், தினசரி உணவில் கேரட்டை சேர்ப்பது மிகவும் எளிது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.
எது சிறந்தது?
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டுமே கண், இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. எனினும் கேரட்டில் கண் ஆரோக்கியத்திற்கு நேரடியாக பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இதயத்தை பாதுகாக்கும் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ளன.
கண் ஆரோக்கியத்திற்கு கேரட் சிறந்த தேர்வாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னணியில் இருக்கிறது. எனவே இரண்டையும் சமநிலையாக உணவில் சேர்த்துக்கொள்வதே முழுமையான ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறந்த வழியாகும்.
- இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது.
- காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல.
அரிசி... இந்தியர்களின் உணவுப்பொருள் மட்டுமல்ல. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் விருப்ப உணவாக அமைந்திருக்கிறது. அரிசியில் பல வகைகள், நிறங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிற அரிசிகள் முக்கியமானவை. நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அரிசியின் சர்க்கரை சத்து அளவு குறியீடு, நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து மதிப்புகள் வெவ்வேறானவை. அவை பற்றிய தொகுப்பு இது.
வெள்ளை அரிசி
தவிடு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தானியம். மென்மையான தன்மை கொண்டது, நீண்ட ஆயுட்காலம் உடையது, விரைவில் சமைக்கக்கூடியது. முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கிறது.
சிவப்பு அரிசி
இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது. தவிடு அடுக்கையும் நீக்காமல் தக்கவைத்துக்கொள்ளும் முழு தானியம் இது. நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்தது. மண் வாசனை கொண்டது.
பாஸ்மதி அரிசி
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படும் நீண்ட தானிய நறுமண அரிசியாகும். சமைக்கும்போது பஞ்சு போன்று மென்மையாகும். ஒன்றோடொன்று ஒட்டாது. இதில் பழுப்பு பாஸ்மதி அரிசியானது வெள்ளை பாஸ்மதியை விட அதிக நார்ச்சத்து கொண்ட முழு தானியமாகும்.
கருப்பு அரிசி
அதிக அளவு அந்தோசயினின்கள் கொண்டது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வெள்ளை அரிசியை விட அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உடையது. எளிதில் மெல்லக்கூடியது.
பழுப்பு அரிசி
வெளிப்புற உமி மட்டுமே அகற்றப்பட்ட முழு தானியம் இது. நார்ச்சத்து, பி வகை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. வெள்ளை அரிசியை விட குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீடு கொண்டது.
காட்டு அரிசி
காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல. நீர்வாழ் புல் வகையை சேர்ந்தது. புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. காய்கறிகள் அல்லது தானிய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு எந்த அரிசி சிறந்தது?
நீரிழிவு நோயாளிகளுக்கு பழுப்பு, கருப்பு, சிவப்பு மற்றும் முழு தானிய பாஸ்மதி அரிசி வகைகள் ஏற்றவை. ஏனெனில் குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீட்டையும், அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி புரியும். இந்த அரிசியை அளவாக எடுத்துக்கொண்டு காய்கறிகள் போன்ற அதிக நார்ச்சத்துமிக்க உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.
- ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.
வீட்டில் உள்ள ஒரு பொருளைப் பயன்படுத்தியே முகச் சரும பராமரிப்பை மேற்கொள்ள முடியும், பொலிவைக் காக்க இயலும்.
அதற்கு காபித் தூள் போதும். சருமப் பொலிவைக் காக்க உதவும் சில 'காபி பேஸ்பேக்'குகள் இங்கே...
காபித்தூள்-தேன்
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித்தூளை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமச் சுருக்கங்களும், கரும்புள்ளிகளும் குறையும்.
காபித்தூள்-மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் ½ டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக தயாரித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள்-கடலை மாவு
ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள் -தயிர்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள்-தேங்காய் எண்ணெய்
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.
- வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
- பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், எளிதில் கெடாது.
* இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும்.
* சர்க்கரைப் பாகில் எலுமிச்சை சாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது.
* கண்ணாடி பாட்டிலில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
* பயறு வகைகளை ஊறப்போட 'மறந்துவிட்டால் பயறை 'ஹாட் பேக்'கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, வழக்கம் போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
* கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக் உதிர்ந்து விழாமல் இருக்கும்.
* வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
* புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு கேக் வெந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின், வடிவமும், சுவையும் மாறிவிடும்.
* பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
* மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்கிறீர்களா? இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் அப்பளம், போட்டு பிறகு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புது சுவையோடு குழம்பு மணக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க மொறு மொறுப்பாக இருக்கும். எண்ணெய்த் தேவை குறைவாகும்.
* கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
- உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
- உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது.
வாழ்வில் கடைசி வரை உங்களுடன் கூட வரும் உண்மையான துணை யார் என்று நினைக்கிறீர்கள்?
அம்மா?
அப்பா?
மனைவி?
கணவன்?
மகன்?
மகள்?
நண்பர்கள்?
இவர்கள் யாரும் இல்லை. உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை, உங்கள் உடம்புதான். உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப் போவதில்லை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பே. உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக்கொள்ளும்.
நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்.
உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த உடம்பில், மூச்சுப் பயிற்சி-நுரையீரல்களுக்கு தியானப் பயிற்சி-மனதுக்கு யோகாசனப் பயிற்சி- முழு உடம்புக்கு நடைபயிற்சி-இதயத்துக்கு சிறந்த உணவு- செரிமான உறுப்புகளுக்கு நல்ல எண்ணங்கள்- ஆன்மாவுக்கு நற்செயல்கள்- உலகுக்கு இதை உணர்ந்து வாழும்போது வாழ்க்கை வளமாகும், இனிமையாகும்.
- இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.
- தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைப்பது, நீரில் கொதிக்கவிட்டு வேகவைப்பது இதில் எந்த முறையில் சமைப்பது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த இரு சமையல் முறையும் சுவை, நிறம், ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த முறையில் சமைப்பது காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவிடும் என்பது குறித்து பார்ப்போம்.
காய்கறிகளை நீரில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
காய்கறிகளை நீரில் கொதிக்கவைத்து சமைப்பது எளிய மற்றும் வழக்கமான சமையல் முறையாகும். தண்ணீரில் காய்கறிகளை மூழ்கவைத்து 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வேகவைப்பது நல்லது. இந்த சமையல் முறை தொந்தரவு இல்லாதது. ஒரே சமயத்தில் வேறு சமையல் வேலைகளிலும் ஈடுபட ஏதுவானது. இருப்பினும் நீரில் கொதிக்க வைக்கும் செயல்முறையின்போது பல ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இழக்கக்கூடும். அதனால் காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரிக்கலாம். குழம்பில் ஊற்றிவிடலாம். அப்படி செய்யும்போது மட்டுமே ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
நீரில் கொதிக்கவிட்டு வேகவைத்த காய்கறிகள் பெரும்பாலும் மென்மையாக மாறும். கொதிக்க வைக்கும்போது காய்கறிகளின் செல் சுவர்கள் உடைந்து அதன் இயற்கையான சுவை தன்மை வெளியேறக்கூடும். இருப்பினும் உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை நீரில் வேகவைப்பதே சரியானது. அவை ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.
எந்த முறை அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும்?
இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும். அதே வேளையில், நீராவி முறை அதிக நன்மை தரும். இது செரிமானத்திற்கு உகந்த சேர்மங்களை அப்படியே தக்கவைத்துவிடும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளை நீராவியில் சமைப்பதே சிறந்தது. அவற்றை தண்ணீரில் வேகவைப்பது சில ஊட்டச்சத்துக்களை குறைத்துவிடும்.
ஆயுர்வேதத்தில் நீராவியில் சமைக்கும் முறையே சிறந்ததாக மதிப்பிடப்படுகிறது. இது உணவில் இருக்கும் உயிர் சக்தியை பாதுகாக்க உதவுகிறது. உணவை இலகுவாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
நீராவி-கொதிக்கவைத்தல்: முக்கிய வேறுபாடுகள்
ஊட்டச்சத்து தக்கவைப்பு: நீராவியில் வேகவைக்கும்போது மிக குறைவான வைட்டமின்களே இழக்கப்படுகின்றன. நீரில் கொதிக்க வைக்கும்போது வைட்டமின்கள் தண்ணீரில் கசிந்து விடும். அந்த தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
அமைப்பு: நீராவியில் வேகவைப்பது, காய்கறிகளை உறுதியாகவும், மிருதுவாகவும், வண்ணமயமாகவும் தக்கவைத்துவிடும். அதே நேரத்தில் தண்ணீரில் கொதிக்க விடும்போது, காய்கறிகள் மென்மையாக மாறும்.
சுவை: இயற்கையான மற்றும் இனிப்பு சுவைகளை தக்கவைக்க நீராவி சமையல் உதவும். கொதிக்க வைப்பது, காய்கறிகளை லேசானதாக மாற்றும்.
நேரம் - எளிமை: கொதிக்கவைக்கும் முறையுடன் ஒப்பிடும்போது நீராவியில் சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
கொதிக்கும் நீரில் இருந்து வெளிப்படும் நீராவி மூலம் காய்கறிகளை சமைக்கும்போது தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாமல் வேகும். அந்த நீராவி காய்கறிகளின் எல்லா பகுதியிலும் சமமாக பரவி நன்றாக வேக தொடங்கும். காய்கறிகளை மென்மைத்தன்மைக்கு மாற்றுவதோடு சுவையும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாததால் காய்கறிகளில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை தக்கவைக்கப்படும். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம். உதாரணமாக கேரட் நிறம் பளிச்சென்று மாறும். புரோக்கோலி மொறுமொறுப்பு தன்மையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் நீராவியில் வேகவைப்பது காய்கறிகளின் இயற்கையான இனிப்புத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவிடும். நீராவியில் வேகவைக்கும்போது தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது கலோரிகளை கூடுதலாக்காமல் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த துணைபுரியும்.
- சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள்.
- கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும்.
நாம் அன்றாடம் சமையலறையில் சமையலின்போது சில விஷயங்களைப் பின்பற்றினால், குறிப்பிடத்தக்க அளவு எரிவாயுவை (கியாஸ்) மிச்சப்படுத்த முடியும்.
அது பற்றி பார்க்கலாமா...
* அரிசி மற்றும் நவதானியப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். இதனால் எரிவாயு செலவும் மிச்சமாகும்.
* முடிந்த அளவு எல்லாவித சமையல் வேலைகளுக்கும் பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கரில் ஒரே சமயத்தில் பல சமையல் பொருட்களை வேக வைக்கலாம். இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, சமையல் வேலையையும் சீக்கிரமாக முடிக்க முடியும்.
* பால், குழம்பு, கூட்டு வகைகளை குளிர்பதன பெட்டியில் இருந்து அப்படியே எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணாதீர்கள். இதனால் சூடாக அதிக நேரம் ஆவதுடன், அதிக எரிபொருளும் செலவாகும். எனவே, பிரிட்ஜில் இருந்து எடுக்கும் சமையல் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து, அதன் குளிர் குறைந்து இயல்பான தட்ப வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் சூடாக்க வேண்டும்.
* சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கியாஸ் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன்னரே நறுக்கி வைப்பது மிகவும் முக்கியம். அதுபோல் மசாலாக்களை அரைத்து கியாஸ் அடுப்பின் பக்கத்தில் வைத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதால் ஆகும் எரிவாயு விரயத்தைக் குறைக்கலாம்.
* உங்கள் வீட்டு சமையலறையில் காற்று அதிகம் வீசுகிறது என்றால் ஜன்னலை அடைத்து விடுங்கள். காற்று அதிகம் அடித்தால் கியாஸ் அடுப்பின் ஜுவாலை படபடக்கும். இதனால் சமைக்க அதிக நேரம் பிடிப்பதோடு, எரிபொருளும் அதிகம் செலவாகும்.
* சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள். ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். ஐந்து நிமிட கியாஸ் செலவும் மிச்சமாகும்.
* கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும். ஆரஞ்சு நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ எரிந்தால் பர்னர் சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனால் எரிவாயு தேவையில்லாமல் பாழாவதை தவிர்க்கலாம்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது, சமையல் பொருட்களை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதால் ஆகும் கியாஸ் செலவை குறைக்கும்.
- வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
- அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 3
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து பிசையவும்.
வெங்காயத்தில் இருந்து தண்ணீர் வரும். மாவிற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசையவும். (அரிசி மாவு இல்லையென்றால் இட்லி மாவு சேர்த்து பிசையலாம்)
சிறிது தளர்வாக மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக வெட்டிய முட்டையை வைத்து உருண்டையாக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் மசாலா முட்டையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.
- சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள்.
- மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும்.
மன நல பிரச்சனை எந்த நேரத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். அது எப்படி உண்டாகும்? என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும்? அதனை எப்படி கையாள வேண்டும்? என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து செயல்பட்டால் மன நலனை பேணி பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் மன நோயாக மாறி மன நலனில் மட்டுமல்ல உடல் நலனிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன நோய்க்கு வித்திடும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
கவனம் செலுத்துவதில் சிரமம்
எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். மோசமான செயல்திறன் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து கவனச்சிதறலுடன் செயல்படுவார்கள். அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
உடல் ரீதியான மாற்றம்
மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது பலருக்கும் பசியின்மை உண்டாகும். சாப்பாடு மீது விரக்தி ஏற்படும். சிலரோ வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மன நலன் பாதிப்புக்குள்ளாகி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.
மனநிலை மாற்றம்
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள். இயல்பாக பேசினால் கூட கோபத்தை கொப்பளித்துவிடுவார்கள். கோபம் அவர்களிடத்தில் தொடர்ந்து குடிகொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவார்கள். தனிமையை நாடுவார்கள். எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்பு விரும்பி செய்த விஷயங்களை கூட தவிர்ப்பார்கள்.
மதுப்பழக்கம்
எந்தவொரு பிரச்சனையையும் மன ரீதியாக எதிர்கொள்ள தைரியமில்லாமலோ, மனதுக்குள்ளேயோ விவாதித்து அதுபற்றி பிறரிடம் பேசத் தயங்குவதோ மன நல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். அதில் இருந்து மீள மது, போதை பழக்கத்தை நாடுவது நாளடைவில் அதற்கு அடிமைப்படுத்திவிடும்.
அதிக உணர்ச்சி நிலை
மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும். அதிகப்படியான பயம் எட்டிப் பார்க்கும். கவலைகள் ஆக்கிரமித்து பயத்தை அதிகப்படுத்தும். மனத்தெளிவு இல்லாமல் குழப்பம் குடிகொள்ளும். பதற்றமும் பற்றிக்கொள்ளும்.
உடல் வலி
மன நோயின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நாள்பட்ட தலைவலி, வயிற்றுப்போக்கு, தசை வலி, கை, கால் வலி என உடல் ரீதியான வலிகளை எதிர் கொள்வார்கள்.

நடத்தை
பிளேடு கொண்டு கைகளை கீறுதல், கத்தியைக்கொண்டு வெட்டுதல் போன்ற காயத்தை ஏற்படுத்தும் பொறுப்பற்ற நடத்தை, தற்கொலை பற்றிய சிந்தனை தலைதூக்குதல் போன்ற செயல்பாடுகள் மன நோயின் அறிகுறியாக கருதப்படும்.
மாற்றங்கள்
அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுதல், காரணமே இல்லாமல் சண்டையிடுதல், வாக்குவாதம் செய்தல், அச்சுறுத்துதல், மற்றவர்களுக்கோ அல்லது தனக்கோ தீங்கு விளைவித்தல் போன்ற செயல்பாடுகளையும் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?
உங்கள் அன்புக்குரியவர்கள் மன நல பிரச்சனைக்கு ஆளாகி இருந்து, இது போன்ற அறிகுறிகளுடன் செயல்பட்டால் அவர்களை நிதானத்துடன் கையாள வேண்டும். அன்பாக, பாசமாக வழி நடத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தாலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
இணைந்து பணியாற்றுங்கள்
குடும்பத்தினர், நண்பர்கள், உடன் வேலை செய்யும் சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பை எளிதாக்குங்கள்.
நண்பர்கள், குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் கருத்துகளில் நிறை, குறை இருந்தால் அவர்கள் மனம் நோகாதபடி சுட்டிக்காட்டுங்கள்.
உங்கள் நலம் விரும்பிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். இலக்குகளை நிர்ணயித்து திட்டமிடுங்கள். மனதுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் செயல்படுங்கள்.
தவிர்க்கும் வழிமுறைகள்
எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது. உங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து மன அழுத்தம் இருந்தாலோ, மன நலன் பாதிப்புக்குள்ளாகி நிம்மதியை இழந்தாலோ மன நல நிபுணரிடம் கவுன்சலிங் பெற வேண்டும்.
உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்கள் கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அவர்களிடம் பேசவோ, உங்களின் நிலை பற்றி அறிய கேள்வி கேட்கவோ தயங்காதீர்கள்.
- புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
- எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது.
காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால், இவற்றை ஒன்றாகக்கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதி வந்ததும் இறக்கி விடவும். ருசி மிகுந்த பொரித்த குழம்பு ரெடி.
இடியாப்பம் மீந்து விட்டால் அதை வெயிலில் காய வைத்து எடுத்தால் புதுவகை வடகம் தயார்.
புளிச்சாற்றில் உப்பு, பெருங்காயம் சேர்ந்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான புளி மிளகாய் தயார்.
முறுக்குமாவு, தேன்குழல் மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து, சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவம் ஆகி விடும்.
சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு, சிறு பூச்சிகள் வராது. சாம்பார் செய்யும் போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
துவையல் அரைக்கும்போது, சின்னக் கிண்ணத்தில் புளியை தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும் குக்கர் மீது வைத்து 5 நிமிடங்கள் கழித்து அரைக்க உபயோகித்தால் துவையல் நன்றாக மசியும்.
புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். அதுபோல் எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது. அப்போது தான் புலாவ் குழையாமல் இருக்கும்.
குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்கு பதில் தக்காளி கெச்சப் சேர்த்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் சூப்பராக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கித் தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் கமகம வாசனையுடன் இருக்கும்.






