என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.
    • 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம்.

    அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியை, சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற தன்மைகள் இதில் நிறைந்திருக்கின்றன.

    தக்காளியில் மிக அதிக அளவில் உள்ள வைட்டமின்கள் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.

    மேலும், சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சரும அழுக்குகளையும் முற்றிலும் சரிசெய்வதால் மாசுகள் நீங்கி முகம் பொலிவாக மாறும்.

    தக்காளியில் உள்ள லைக்கோபீன் போன்ற பொருள்கள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகும். சருமத்தின் நிறமும் மேம்படும்.

    சருமத்தின் செல்கள் அதிக எண்ணெய்த் தன்மை மற்றும் அதிக அளவில் வறட்சி அடையும்போது சரும செல்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

    சரும வறட்சி அதிகமாகும்போது இறந்த செல்கள் சருமத்தில் அப்படியே தேங்கி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயதான தோற்றத்தையும் உண்டாக்கும்.

    தக்காளியில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், சரும செல்களின் சேதத்தைத் தடுப்பதோடு, இறந்த செல்களை நீக்கி சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

    இதற்கு, தக்காளியை சாறாகவோ அல்லது கூழ் போன்று மசித்தோ நேரடியாக முகத்தில் தடவலாம்.

    அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவினால் போதும்.

    வளரிளம் பருவம் தொடங்கியதுமே ஆண், பெண் இரு பாலரும் சந்திக்கும் சருமப் பிரச்சனை, முகப்பரு. குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

    அதிகப்படியான சீபம் சுரப்பது, சருமத் துளைகளுக்குள் அழுக்குகள் நுழைவது, பாக்டீரியா போன்றவற்றின் தொற்றுகள் காரணமாக பருக்கள் உண்டாகின்றன. இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து, சருமத்தின் பி.எச். அளவை சீராக வைத்திருக்கவும், முகப்பருக்களை விரட்டவும் தக்காளி பயனுள்ளதாக இருக்கும்.

    முகப்பருக்களை போக்குவதற்கு தக்காளியை பயன்படுத்தும்போது, 4 ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் டீ டிரீ ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

    20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினாலே போதும். முகப்பருக்களை காணாமல் ஆக்கிவிடலாம்.

    சிலருக்கு முகத்தில் பருக்கள், அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சருமத்தின் துளைகள் திறந்துகொள்ளும். பெரிய பெரிய சருமத் துளைகள் இருக்கும். அப்படி இருப்பதால் அதன் வழியே மாசுகள் உள் நுழைந்து சருமத்தில் வலியுடன் கூடிய பருக்கள், கட்டிகள் ஆகியவற்றை உண்டாக்கலாம். இதைச் சரிசெய்ய தக்காளி நல்ல மருந்தாக இருக்கும்.

    சருமத்தின் பெரிய துளைகளைச் சுருக்க, தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறைக் கலந்துகொள்ள வேண்டும். இதை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். அப்படி தடவுவதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.

    • அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
    • இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    ஊறுகாய் என்றால் மாங்காய், எலுமிச்சை மட்டும் இல்லை. சில வகை மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் தயார் செய்து உண்ணும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது. குறிப்பாக, இந்தியன் மேக்க ரல் பிஷ் எனப்படும் அயலை மீனை ஊறுகாய் செய்து உண்ணும் வழக்கம் உண்டு. இந்த அயலை மீன் ஊறுகாய் மிகவும் ருசியான ஒன்று. மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.

    அயலை மீனை வறுத்து, மிளகாய்தூள், வெந்தயம், கடுகு சேர்த்து வினிகரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் பேக் செய்து ஊறுகாய் போல் மாற்றுவார்கள். இதனை அவ்வப்போது உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரித்துகுடலில் உணவை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    பொதுவாக அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அயலை மீனில் சுமார் 205-305 கலோரிகள், 18-19 கிராம் புரதம், 13-25 கிராம் கொழுப்பு, பொட்டாசியம் 314 மி.கி., மெக்னீசியம் 76 மி.கி., செலினியம் 44 மி.கி., சோடியம் 90 மி.கி. என்ற அளவில் உள்ளன. வைட்டமின் பி 12, நியாசின், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.

    இது நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி, மனச்சோர்வு, ரத்த சோகை, நீரிழிவு போன்றவற்றுக்கு உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மீனுக்கு கானாங்கெளுத்தி என்ற ஒரு பெயரும் உண்டு. வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து உண்ணும் ட்யூனா மீனுக்கு இணையான சத்துக்கள் இந்த அயலை மீனில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா?
    • அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

    ஒருவர் தனக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது? அதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பற்றி...

    திடீர் அழுகை

    சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    கை நடுக்கம்

    எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மனஅழுத்தத்தின் அறிகுறி என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒருவருக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    கண் இமை துடித்தல்

    கண் இமை திடீரென்று துடிக்கிறதா? அப்படி அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே கண் இமைகள் வழக்கத்துக்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பார்க்க வேண்டும்.

    • வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.
    • புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    தோசை மாவு அரைக்கும் போது, வேக வைத்த சாதத்தையும் சேர்த்து அரைத்தால் தோசை மென்மையாக இருக்கும்.

    தோல் சீவிய இஞ்சை இடித்து தயிரில் சேர்த்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது புளித்த மோர் சேர்த்தால் பொரியல் மொறுமொறுவென்று இருக்கும்.

    கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து கிளறினால் அல்வாவின் ருசி கூடுதலாகும்.

    வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது வெந்தயத்தை சேர்த்தால் நெய் வாசனை கமகமவென்று இருக்கும்.

    வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.

    புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.

    ரசம் தாளிக்க எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி தாளித்தால் ரசம் வாசனையாக இருக்கும்.

    கீரையை சமைத்து இறக்கிய பின்னர் உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தடுக்கலாம்.

    சாம்பாரில் புளிப்பு அதிகமாகி விட்டால் ஒரு துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.

    பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் பூரி சீக்கிரம் நமத்து போகாமல் இருக்கும்.

    சாலட் தயாரிக்க தக்காளி நறுக்கும் போது சாறு வெளியேவராமல் இருக்க, தக்காளியின் அடிப்பகுதியில் பிளஸ் போன்று கீறி பின்னர் வட்டமாக நறுக்கலாம்.

    ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கையிலை சேர்த்து இறக்கினால் தனி சுவை தரும்.

    சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் கொள்ளுப்பருப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

    • புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.
    • உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது.

    மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 85 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு வித்திடும் தினசரி பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளது.

    1939-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 268 மாணவர்களின் 80 ஆண்டுகளுக்கு மேலான வாழ்வியல் முறையை ஆய்வு செய்து இந்த பழக்கவழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை குறித்து பார்ப்போம்.

    1. புகைப்பழக்கத்தை தவிர்த்தல்

    புகைப்பிடிக்கும் பழக்கத்தை பின்தொடர்வது புற்றுநோய், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு உள்பட உயிருக்கு அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புகைப்பழக்கத்தை தவிர்ப்பது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும். ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.

    2. மதுப்பழக்கத்தை அறவே தவிர்த்தல்

    மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துதல் அல்லது அறவே தவிர்த்தல் உடல் நலத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். நல்ல தூக்கத்திற்கு வித்திடும். உடலுக்கு அதிக ஆற்றலையும், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும் தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.

    3. உடல் எடையை பராமரித்தல்

    சத்தான உணவுகளை உண்பது, முறையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை பராமரிப்பது நோய்களை தடுக்க உதவிடும். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும்.

    4. தினசரி உடற்பயிற்சி செய்தல்

    தினமும் குறைந்தது 30 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி மேற்கொள்வது மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் `என்டார்பின்கள்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.

    5. சிக்கல்களை சமாளித்தல்

    உறவுகளுக்குள் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. அவற்றை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே முக்கியமானது. அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் சமாளிக்கும் திறனை கொண்டிருப்பது உறவுகளை வலுப்படுத்தும். மன அமைதியையும் உண்டாக்கும்.

    6. கற்றுக்கொள்ளுதல்

    தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் பழக்கமும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

    7. அன்பை வெளிக்காட்டுதல்

    நீண்டகால நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை துணை வெளிக்காட்டும் அன்பு உள்ளிட்டவை மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமானவை என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

    • மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.
    • தர்பூசணியை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து விழுதாக தயாரிக்க வேண்டும்.

    நாம் உணவுப்பொருட்களாக பயன்படுத்துபவற்றை கொண்டே உன்னதமான அழகைப் பெறலாம். அதுகுறித்து...

    * காய்ச்சாத பசும்பாலை தினமும் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகும்.

    * காபித்தூள், தக்காளி, அரிசி மாவு மூன்றையும் ஒன்றாக கலந்து ஸ்கிரப் தயாரித்து முகத்தில் பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கி முகம் பளபளக்கும்.

    * வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு சாறை தினசரி பருக, முகம் பொலிவடையும்.

    * தக்காளிச் சாறு, தயிர் மற்றும் ஓட்ஸ் மீல் மூன்றையும் விழுதாக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், தழும்புகள் மற்றும் கொப்புளங்கள் நாளடைவில் மறைந்துவிடும்.

    * வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை இரண்டையும் தண்ணீர் கலந்து பசை போல தயாரித்து முகத்தில் தடவி 4 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, இறந்த செல்கள் நீங்கி முகம் இளமையாகவும், பொலிவாகவும் ஆகும்.

    * மசித்த பப்பாளி மற்றும் பாதாம் பருப்பை விழுதாக்கி முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து ஸ்கிரப் செய்து பின்பு கழுவுவதால் முகம் மென்மையாக மாறிவிடும்.

     

    * முகத்தில் தேனைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவ, இறந்த செல்கள் நீங்கி வறண்ட சருமம் ஈரப்பதமாக மாறிவிடும்.

    * எலுமிச்சம்பழத் தோலை அரைத்து முகத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் தடவி பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ, சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தை மென்மைப்படுத்தும்.

    * மசித்த பப்பாளியை வாரத்துக்கு 10 முதல் 15 நிமிடங்கள் முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பொலிவாக மாறிவிடும்.

    * தயிர், தேனுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து விழுதாக மாற்றி முகத்தில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் 'பளிச்'சென மாறிவிடும்.

    * தோல் நீக்காமல் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து அதில் ஒரு முட்டை, தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் ஈரத்துணியால் துடைக்க, முகம் பிரகாசமாக ஆகிவிடும்.

    * தர்பூசணியை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து விழுதாக தயாரிக்க வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் பொலிவோடு இருக்கும்.

    மேற்கண்ட குறிப்புகளில் அவரவர் முகத்துக்கு உகந்த குறிப்புகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்வதன் மூலம் இளமையாகவும் பொலிவாகவும் முகத்தை வைத்திருக்க முடியும். எல்லாவற்றையும் விட, ஆரோக்கியமான சரிவிகித உணவால் உடல் ஆரோக்கியம் பெற்று, முகம் பொலிவடையும்.

    • உடனே சாப்பிட்டு விடலாம் என்பதால் இந்த அரிசிக்கு அந்த காலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
    • இந்த அரிசியின் ஊட்டச்சத்து மதிப்புக்கும் குறைவில்லை.

    அரிசியை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால் சமைக்காமல் சாப்பிடக்கூடிய அரிசி அசாமில் விளைவிக்கப்படுகிறது. அதன் பெயர் 'கோமல் சவுல்'. மந்திர அரிசி என அழைக்கப்படும் இதை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்தால் போதும். சாதம் பதத்துக்கு மாறி சாப்பிட தயாராகிவிடும்.

    இந்த அரிசி வழக்கமான அரிசியை போல் இல்லாமல் தனித்துவமான ஸ்டார்ச் அமைப்பை கொண்டுள்ளது. அது ஊற வைக்கும்போது மென்மையாக மாற வழிவகை செய்கிறது. அப்படி மாறிய சாதத்துடன் வெல்லம், தயிர், பால் அல்லது வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள்.

    பண்டைய காலத்தில் வயல் வேலைக்கு செல்லும் விவசாயிகள், நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் இந்த அரிசியை உடன் எடுத்து சென்றார்கள். சமைக்க வேண்டிய அவசியமில்லாமல் தண்ணீரில் ஊற வைத்தால் போதும். உடனே சாப்பிட்டு விடலாம் என்பதால் இந்த அரிசிக்கு அந்த காலத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது. எடுத்து செல்வதற்கும் எளிதானது, உணவு தயாரிக்க சுலபமானது மட்டுமின்றி பசி உணர்வை போக்கி நிறைவாக சாப்பிட்ட உணர்வையும் தரக்கூடியது. திருவிழாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்வுகளில் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டது.

    இந்த அரிசியின் ஊட்டச்சத்து மதிப்புக்கும் குறைவில்லை. இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கக்கூடியது. அதேவேளையில் மெதுவாக வெளியிடும் ஸ்டார்ச்சை கொண்டிருப்பதால் சோம்பலாக உணர வைக்காமல் உற்சாக நிலையை தக்கவைக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத்தை ஊக்குவிக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவிடும். பிரீரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். உடலுக்கு தேவையான இரும்பு சத்தையும் அளிக்கும். உணவில் இருந்து அத்தியாவசிய தாதுப்பொருளை போதுமான அளவு பெற முயற்சிப்பவர்களுக்கு இந்த அரிசி சிறந்த தேர்வாக அமையும். பால் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் புரதம், கால்சியம் கொண்ட சமச்சீர் உணவாக மாறும். வெல்லம், வாழைப்பழம் சேர்ப்பதன் மூலம் இரும்புச்சத்து, நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும்.

    அசாமின் பாரம்பரிய அரிசியாக இருந்த கோமல் சவுலை விவசாயிகள் வருடத்திற்கு ஒருமுறை பயிரிட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அரிசியின் பயன்பாடு குறைந்து போனது. தற்போது மீண்டும் இந்த அரிசி ரகத்துக்கு மவுசு கூடியுள்ளது. அசாம் மாநிலத்தை கடந்து மற்ற பகுதியில் வசிப்பவர்கள் மத்தியிலும் இந்த அரிசிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் தளங்களிலும் இந்த மந்திர அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

    • கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும்.
    • கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது,​ கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

    உடலுக்கு கொழுப்பு அவசியம். ஆனால் அதன் அளவு அதிகரிப்பது ஆபத்தானது. குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100-க்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டும்போது மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

    இந்த கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது சில உடல் உறுப்புகளே அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரிக்கும். அதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சிகிச்சை பெற்றாலே கொழுப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்திவிடலாம். கொழுப்பு அதிகரிப்பதை எந்தெந்த உறுப்புகள் எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன என்று பார்ப்போமா?

    கால் வலி அல்லது தசை பிடிப்பு

    உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்பட தொடங்கும். இதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். அதன் தாக்கமாக நடக்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அது கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ மெற்கொள்வது அவசியமானது.

    மார்பு வலி அல்லது அழுத்தம்

    மார்பு வலியையோ அல்லது அழுத்தத்தையோ உணர்வதும் கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இதய தமனிகளில் கொழுப்பு குவிவது மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். மார்பில் இறுக்கமோ, எரிச்சலோ உண்டாகக்கூடும். அத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு அல்லது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    கழுத்து, தாடை அல்லது தோள்பட்டையில் வலி

    கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும். ஏனெனில் கொழுப்பு அதிகரிக்கும் போது, முழு உடலின் ரத்த ஓட்டமும் தடைபட தொடங்கும். இதன் காரணமாக கழுத்தைச் சுற்றி மட்டுமின்றி தாடை மற்றும் தோள்பட்டைகளில் அசாதாரண வலியை உணரலாம்.

    வேறு சில அறிகுறிகள்

    கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

    உடலில் கொழுப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக, கால்களின் நிறம் மாறக்கூடும். சில சமயங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக்கூடும்.

    தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்றல் ஆகியவை கொழுப்பு அதிகரித்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

    படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் அல்லது சோர்வாக உணருதல் அதிகரித்த கொழுப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    கண்களைச் சுற்றி மஞ்சள் அல்லது மஞ்சள் வளையம் தோன்றக்கூடும்.

    உடலில் இதுபோன்ற மாற்றங்களை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனால் நிலைமை மோசமாகாமல் தடுக்க முடியும்.

    • வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவிடும்.
    • ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வழிவகுக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் நன்மை பயக்கும்.

    செரிமானத்தை மேம்படுத்துவது முதல் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வு அளிக்கக்கூடியது வெந்தயம். இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரை பருகுவது நல்லதா? வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து குடிப்பது சரியானதா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. எது சிறந்தது என்று பார்ப்போம்.

    ஊறவைத்த நீர்:

    வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைக்கும்போது அவை நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை வெளியிடும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தும். அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும்.

    வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவிடும்.

    ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க வழிவகுக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் நன்மை பயக்கும். (எனினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே நீரிழிவு நோயாளிகள் இதனை பருக வேண்டும்)

    வெந்தயத்தை நீரில் ஊறவைத்து தயாரிப்பது எளிதானது, தினசரி பருகுவதற்கு ஏற்றது.

    கொதிக்க வைத்த நீர்:

    வெந்தயத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது அதிலிருக்கும் சேர்மங்களை பிரித்தெடுத்து சக்தி வாய்ந்த பானமாக மாற்றும்.

    உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் நச்சு நீக்கும் பானமாக செயல்படும்.

    சளி, இருமல், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

    கொழுப்பை சீராக நிர்வகிக்கும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    (இருப்பினும் வேகவைத்த வெந்தய நீர் கசாயம் போல் சற்று கடினமான சுவையை கொண்டிருக்கும். தினசரி பருகுவது அனைவருக்கும் பொருந்தாது).

    வேறுபாடுகள்:

    ஊறவைத்த நீர் இயற்கையான நொதிகளை தக்கவைத்து வயிற்றுக்கு இதமானதாக இருக்கும்.

    வேகவைத்த நீர் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் சேர்மங்களை வெளியிடும். ஆனால் வெப்பத்தன்மை காரணமாக சில ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும்.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஊற வைத்த நீர் தினசரி பருகுவதற்கு ஏற்றது. வேக வைத்த நீர் குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளின்போது மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவானது.

    எதை தேர்வு செய்வது?

    தினசரி உடல் ஆரோக்கியம், உடல் எடையை சீராக பேண ஊறவைத்த நீர் சிறந்தது.

    பருவ காலநிலை மாற்றத்தின்போது ஏற்படும் சளி, இருமல், நச்சுக்களை போக்க வெந்தயம் கொதிக்க வைத்த நீர் பயனுள்ளதாக இருக்கும்.

    வெந்தய நீரை தினமும் ஒரு டம்ளருக்கு மேல் குடிக்கக்கூடாது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பருக வேண்டும். தினசரி பருகுவதற்கு வெந்தயத்தை ஊறவைத்த நீர்தான் சிறந்தது.

    • சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
    • தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம்.

    ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்யவும். தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.

    தேங்காய் பர்பி கிளறும்போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி துருவி கலந்து விட்டால் சுவையான கலர்புல் பர்பியாக இருக்கும்.

    தேயிலையை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.

    இட்லி மாவு கொஞ்சமாக இருந்தால் ரவையை வறுத்து மாவுடன் கலந்து சிறிது நேரம் ஊற வைத்த பிறகு தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

    பால் பாயாசம் செய்யும் போது இரண்டு பச்சை வாழைப் பழத்தை நன்கு பிசைந்து போடவும். சுவை கூடும். மணமாகவும் இருக்கும்.

    ரவையை டால்டா விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறினால் ருசி அதிகரிப்பதுடன் டால்டாவும் குறைவாக செலவாகும்.

    வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் வித்தியாசமான, ருசியான வடை தயார்.

    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    பீட்ரூட்டின் தோலை நகத்தினால் கீறிப் பார்த்தால் உள்ளே நல்ல ரோஸ் நிறத்தில் இருந்தால் அது இனிப்பான காயாகும்.

    வற்றல் செய்யும் கூழில் சிறிதளவு வடிகஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் வற்றல் மாவாக கரையும்.

    பஜ்ஜியில் அதிக காரம் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் உப்பையும், ஓமத்தையும் சேர்த்து அரைத்து பஜ்ஜி செய்யலாம். சுவையாக இருக்கும்.

    தேங்காய் பர்பி செய்கிறீர்களா? வேர்க்கடலையின் சிவப்புத் தோலை நீக்கி, இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டு செய்யுங்கள். கூடுதல் சுவை கிடைக்கும்.

    தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.

    குழம்பில் மஞ்சள் பொடி அதிகமாகி விட்டால் வருந்த வேண்டாம். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை குழம்பில் போடுங்கள். அதிகமான மஞ்சள் பொடி உறிஞ்சப்படும்.

    முறுக்கு, தட்டை, தேன்குழல் நமத்து போகாமல் இருக்க வேண்டுமானால், மாவு பிசையும்போது வெந்நீர் ஊற்றி பிசைய வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீளவாக்கில் வெட்டி, அதனுடைய விதைகள் சிவக்கும் அளவுக்கு எண்ணெய்யில் வறுத்த பின்னர் துவையலோ, பொடியோ செய்தால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.

    • முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும்.
    • பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

    இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சருமத்தில் உண்டாகும் பருக்களை கட்டுப்படுத்துவதற்கும், சரும பராமரிப்புக்கும் அதிக நேரமும், பணமும் செலவிட முடியாத நிலைமை பலருக்கும் இருக்கிறது. பார்லர் பேஷியல், கிரீம்கள் போன்றவை பருக்களை நீக்கி சருமத்திற்கு உடனடி பொலிவை தந்தாலும், அது தற்காலிக நிவாரணமாகவே அமைகிறது.

    இதற்கு மாற்றாக, இயற்கை பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் 'நேச்சுரல் பேஷியல்' எனும் இயற்கை அழகு சிகிச்சை பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். சமையலறையிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த பேஷியல், சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க உதவுவதோடு பருக்கள் வராமல் தடுப்பதற்கும் உதவும்.

    'நேச்சுரல் பேஷியல்' என்பது ரசாயனங்கள் இல்லாத, இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் முக அழகு பராமரிப்பு முறையாகும். இதில் பால், தேன், மஞ்சள், கடலைமாவு, கற்றாழை, ரோஜா நீர் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் நல்ல பலனை அளிக்கின்றன. எவ்வாறு 'நேச்சுரல் பேஷியல்' செய்யலாம் என்று பார்ப்போம்.

    • முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும். காட்டன் துணியில் பாலை நனைத்து முகத்தை மெதுவாக துடைக்கவும். பால் சருமத்தை சுத்தம் செய்வதுடன், மென்மையும் அளிக்கும்.

    • வெந்நீரில் சிறிது வேப்பிலை அல்லது புதினா போட்டு ஆவி பிடிப்பது, முகத்தில் உள்ள துளைகளில் இருந்து அழுக்குகளை வெளியேற்ற உதவிடும். ஆவி பிடிப்பதற்கு சுமார் 5 நிமிடங்களே போதுமானது.

    • மசாஜ் செய்வது சருமத்தை உறுதியானதாக மாற்றும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் ஒன்றை விரல்களில் தடவி சருமத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இது முக சோர்வை குறைத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    • ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் தேவையான அளவு பால் கலந்து குழைத்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    • தக்காளி சாறை காட்டன் துணியில் நனைத்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். முகத்தில் எண்ணெய் சுரப்பு குறையும், சரும துளைகள் சுருங்கும்.

    • வெள்ளரிக்காய், தயிர் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வெயிலால் ஏற்பட்ட எரிச்சல் குறையும்.

    • பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகம் பிரகாசமாகவும், இளமையாகவும் தோன்றும். பப்பாளி இறந்த செல்களை இயற்கையாகவே அகற்றும் தன்மை உடையது.

    • காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மென்மையாக தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். காபி தூள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

    • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பின்னர் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

    • 2 முதல் 3 கிராம்புகளை வெந்நீரில் ஊறவைத்து குளிர்ந்த பின்பு அந்த நீரை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவுவது, சருமத்தில் பருக்கள் வருவதை தடுக்கும்.

    இதோடு சேர்த்து பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்:

    • தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

    • அன்றாடம் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

    • பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.

    • ரசாயனம் கலந்த சரும உபகரணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    • பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.
    • உடல் உணர்த்தும் இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது.

    உடலில் ஏற்படும் வலிகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியம் செய்து விடுகிறோம். ஆனால் அவற்றில் சில வலிகள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். ஒருபோதும் உதாசீனம் செய்யக்கூடாத 12 முக்கிய வலிகள் குறித்தும், அவை அடிக்கடி வருவது எத்தகைய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்ப்போம்.

    மார்பு வலி

    மார்பில் அடிக்கடி வலி ஏற்படுவது நல்லதல்ல. குறிப்பாக இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக்கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உடனடி மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

    வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்பு

    திடீரென வயிற்று வலியோ, வயிற்று பிடிப்போ ஏற்பட்டால் குடல் புண், பித்தப்பை கோளாறு போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவதை உணர்த்தலாம். அல்சர், வயிற்று கோளாறு பிரச்சனையாகவும் இருக்கலாம்.

    கால் வலி

    காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதே நிலை நீடித்தால் உயிருக்கு ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது.

    பல் வலி

    பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அனைத்து பற்களுக்கும் பரவுவது மட்டுமின்றி, உடலின் பிற பகுதிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.

    கால்கள் அல்லது பாதங்களில் எரிச்சல்

    கால்கள் அல்லது பாதங்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுவதும் நல்லதல்ல. நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு அல்லது வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    திடீர் தோள்பட்டை வலி

    தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, சில நேரங்களில் நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வலியாக இருக்கலாம்.

    திடீர் தலைவலி

    இதுவரை அனுபவிக்காத அளவிற்கு திடீரெனவோ, கடுமையாகவோ தலைவலி ஏற்பட்டால், மூளையில் ரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற ஆபத்தான அறிகுறிகளை சுட்டிக் காட்டலாம்.

    கழுத்து வலி, காய்ச்சல்

    கழுத்தை நகர்த்த முடியாத அளவுக்கு வலியோ, அதனுடன் காய்ச்சலோ இருந்தால், அது மெனின்ஜைட்டிஸ் என்ற உயிர்க் கொல்லி நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.

    முதுகு வலி (கீழ் பகுதி அல்லது நடுப்பகுதி)

    முதுகின் அடிப்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ வலியை உணர்ந்தால், முதுகின் உட்புறத்தில் நோய்த்தொற்று அல்லது முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

    பாத வலி அல்லது உணர்விழப்பு

    பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு அல்லது பாதங்கள் உணர்விழந்து போவது அல்லது கடுமையாக வலிப்பது போன்றவை நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதன் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

    கண் வலி

    கண்களில் வலி, அழுத்தம் அல்லது பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குளோக்கோமா அல்லது கண் தொற்றுகள் காரணமாக இருக்கலாம்.

    காது வலி சீழ் வடிதல்

    காது வலியுடன் காய்ச்சல் அல்லது சீழ் வெளியேறுதல் ஏற்பட்டால், அது கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாகும். தாடை, தொண்டை அல்லது மூக்கு துளைகளுக்கு அந்த தொற்று பரவக்கூடும். அதனால் காதுவலி அதிகரிக்கும்.

    உடல் உணர்த்தும் இத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணிக்கக் கூடாது. ஏதேனும் ஒரு வலி தொடர்ச்சியாக நீடித்தால் தாமதமின்றி மருத்துவரை அணுகுவது முக்கியமானது.

    ×