என் மலர்
சமையல்

ஊட்டச்சத்துகள் நிறைந்த மீன் ஊறுகாய்
- அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.
ஊறுகாய் என்றால் மாங்காய், எலுமிச்சை மட்டும் இல்லை. சில வகை மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் தயார் செய்து உண்ணும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது. குறிப்பாக, இந்தியன் மேக்க ரல் பிஷ் எனப்படும் அயலை மீனை ஊறுகாய் செய்து உண்ணும் வழக்கம் உண்டு. இந்த அயலை மீன் ஊறுகாய் மிகவும் ருசியான ஒன்று. மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.
அயலை மீனை வறுத்து, மிளகாய்தூள், வெந்தயம், கடுகு சேர்த்து வினிகரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் பேக் செய்து ஊறுகாய் போல் மாற்றுவார்கள். இதனை அவ்வப்போது உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரித்துகுடலில் உணவை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.
பொதுவாக அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அயலை மீனில் சுமார் 205-305 கலோரிகள், 18-19 கிராம் புரதம், 13-25 கிராம் கொழுப்பு, பொட்டாசியம் 314 மி.கி., மெக்னீசியம் 76 மி.கி., செலினியம் 44 மி.கி., சோடியம் 90 மி.கி. என்ற அளவில் உள்ளன. வைட்டமின் பி 12, நியாசின், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.
இது நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி, மனச்சோர்வு, ரத்த சோகை, நீரிழிவு போன்றவற்றுக்கு உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மீனுக்கு கானாங்கெளுத்தி என்ற ஒரு பெயரும் உண்டு. வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து உண்ணும் ட்யூனா மீனுக்கு இணையான சத்துக்கள் இந்த அயலை மீனில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.






