என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    தக்காளி தரும் பளிச் அழகு
    X

    தக்காளி தரும் 'பளிச்' அழகு

    • எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.
    • 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம்.

    அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத தக்காளியை, சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதற்கேற்ற தன்மைகள் இதில் நிறைந்திருக்கின்றன.

    தக்காளியில் மிக அதிக அளவில் உள்ள வைட்டமின்கள் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.

    மேலும், சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சரும அழுக்குகளையும் முற்றிலும் சரிசெய்வதால் மாசுகள் நீங்கி முகம் பொலிவாக மாறும்.

    தக்காளியில் உள்ள லைக்கோபீன் போன்ற பொருள்கள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகும். சருமத்தின் நிறமும் மேம்படும்.

    சருமத்தின் செல்கள் அதிக எண்ணெய்த் தன்மை மற்றும் அதிக அளவில் வறட்சி அடையும்போது சரும செல்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

    சரும வறட்சி அதிகமாகும்போது இறந்த செல்கள் சருமத்தில் அப்படியே தேங்கி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயதான தோற்றத்தையும் உண்டாக்கும்.

    தக்காளியில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், சரும செல்களின் சேதத்தைத் தடுப்பதோடு, இறந்த செல்களை நீக்கி சருமத்தைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

    இதற்கு, தக்காளியை சாறாகவோ அல்லது கூழ் போன்று மசித்தோ நேரடியாக முகத்தில் தடவலாம்.

    அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவினால் போதும்.

    வளரிளம் பருவம் தொடங்கியதுமே ஆண், பெண் இரு பாலரும் சந்திக்கும் சருமப் பிரச்சனை, முகப்பரு. குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும்.

    அதிகப்படியான சீபம் சுரப்பது, சருமத் துளைகளுக்குள் அழுக்குகள் நுழைவது, பாக்டீரியா போன்றவற்றின் தொற்றுகள் காரணமாக பருக்கள் உண்டாகின்றன. இந்தப் பிரச்சனையைச் சரிசெய்து, சருமத்தின் பி.எச். அளவை சீராக வைத்திருக்கவும், முகப்பருக்களை விரட்டவும் தக்காளி பயனுள்ளதாக இருக்கும்.

    முகப்பருக்களை போக்குவதற்கு தக்காளியை பயன்படுத்தும்போது, 4 ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு ஸ்பூன் டீ டிரீ ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

    20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் முகத்தைக் கழுவலாம். இதை வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினாலே போதும். முகப்பருக்களை காணாமல் ஆக்கிவிடலாம்.

    சிலருக்கு முகத்தில் பருக்கள், அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சருமத்தின் துளைகள் திறந்துகொள்ளும். பெரிய பெரிய சருமத் துளைகள் இருக்கும். அப்படி இருப்பதால் அதன் வழியே மாசுகள் உள் நுழைந்து சருமத்தில் வலியுடன் கூடிய பருக்கள், கட்டிகள் ஆகியவற்றை உண்டாக்கலாம். இதைச் சரிசெய்ய தக்காளி நல்ல மருந்தாக இருக்கும்.

    சருமத்தின் பெரிய துளைகளைச் சுருக்க, தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறைக் கலந்துகொள்ள வேண்டும். இதை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். அப்படி தடவுவதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.

    Next Story
    ×