என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சரும அழகை பாதுகாக்கும் இயற்கை பராமரிப்பு முறைகள்...
    X

    சரும அழகை பாதுகாக்கும் இயற்கை பராமரிப்பு முறைகள்...

    • முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும்.
    • பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

    இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சருமத்தில் உண்டாகும் பருக்களை கட்டுப்படுத்துவதற்கும், சரும பராமரிப்புக்கும் அதிக நேரமும், பணமும் செலவிட முடியாத நிலைமை பலருக்கும் இருக்கிறது. பார்லர் பேஷியல், கிரீம்கள் போன்றவை பருக்களை நீக்கி சருமத்திற்கு உடனடி பொலிவை தந்தாலும், அது தற்காலிக நிவாரணமாகவே அமைகிறது.

    இதற்கு மாற்றாக, இயற்கை பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் 'நேச்சுரல் பேஷியல்' எனும் இயற்கை அழகு சிகிச்சை பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். சமையலறையிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த பேஷியல், சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க உதவுவதோடு பருக்கள் வராமல் தடுப்பதற்கும் உதவும்.

    'நேச்சுரல் பேஷியல்' என்பது ரசாயனங்கள் இல்லாத, இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் முக அழகு பராமரிப்பு முறையாகும். இதில் பால், தேன், மஞ்சள், கடலைமாவு, கற்றாழை, ரோஜா நீர் உள்ளிட்ட இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் நல்ல பலனை அளிக்கின்றன. எவ்வாறு 'நேச்சுரல் பேஷியல்' செய்யலாம் என்று பார்ப்போம்.

    • முகத்தில் உள்ள தூசி, எண்ணெய் சுரப்பை அகற்றுவதற்கு பால் சிறந்த கிளென்சராக செயல்படும். காட்டன் துணியில் பாலை நனைத்து முகத்தை மெதுவாக துடைக்கவும். பால் சருமத்தை சுத்தம் செய்வதுடன், மென்மையும் அளிக்கும்.

    • வெந்நீரில் சிறிது வேப்பிலை அல்லது புதினா போட்டு ஆவி பிடிப்பது, முகத்தில் உள்ள துளைகளில் இருந்து அழுக்குகளை வெளியேற்ற உதவிடும். ஆவி பிடிப்பதற்கு சுமார் 5 நிமிடங்களே போதுமானது.

    • மசாஜ் செய்வது சருமத்தை உறுதியானதாக மாற்றும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் ஒன்றை விரல்களில் தடவி சருமத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். இது முக சோர்வை குறைத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    • ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் தேவையான அளவு பால் கலந்து குழைத்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்கும்.

    • தக்காளி சாறை காட்டன் துணியில் நனைத்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். முகத்தில் எண்ணெய் சுரப்பு குறையும், சரும துளைகள் சுருங்கும்.

    • வெள்ளரிக்காய், தயிர் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். வெயிலால் ஏற்பட்ட எரிச்சல் குறையும்.

    • பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். முகம் பிரகாசமாகவும், இளமையாகவும் தோன்றும். பப்பாளி இறந்த செல்களை இயற்கையாகவே அகற்றும் தன்மை உடையது.

    • காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மென்மையாக தடவி 5 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். காபி தூள் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.

    • வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பின்னர் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

    • 2 முதல் 3 கிராம்புகளை வெந்நீரில் ஊறவைத்து குளிர்ந்த பின்பு அந்த நீரை காட்டன் துணியில் நனைத்து முகத்தில் தடவுவது, சருமத்தில் பருக்கள் வருவதை தடுக்கும்.

    இதோடு சேர்த்து பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்:

    • தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

    • அன்றாடம் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

    • பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.

    • ரசாயனம் கலந்த சரும உபகரணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×