என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    அரிசிகளின் வகைகள்... ஊட்டச்சத்து மதிப்புகள்...
    X

    அரிசிகளின் வகைகள்... ஊட்டச்சத்து மதிப்புகள்...

    • இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது.
    • காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல.

    அரிசி... இந்தியர்களின் உணவுப்பொருள் மட்டுமல்ல. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் விருப்ப உணவாக அமைந்திருக்கிறது. அரிசியில் பல வகைகள், நிறங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிற அரிசிகள் முக்கியமானவை. நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அரிசியின் சர்க்கரை சத்து அளவு குறியீடு, நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்து மதிப்புகள் வெவ்வேறானவை. அவை பற்றிய தொகுப்பு இது.

    வெள்ளை அரிசி

    தவிடு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட தானியம். மென்மையான தன்மை கொண்டது, நீண்ட ஆயுட்காலம் உடையது, விரைவில் சமைக்கக்கூடியது. முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது இவற்றில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே இருக்கிறது.

    சிவப்பு அரிசி

    இயற்கையாகவே நன்மை பயக்கும் சேர்மங்கள், நிறமிகளை கொண்டது. தவிடு அடுக்கையும் நீக்காமல் தக்கவைத்துக்கொள்ளும் முழு தானியம் இது. நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்தது. மண் வாசனை கொண்டது.

    பாஸ்மதி அரிசி

    இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகம் விளைவிக்கப்படும் நீண்ட தானிய நறுமண அரிசியாகும். சமைக்கும்போது பஞ்சு போன்று மென்மையாகும். ஒன்றோடொன்று ஒட்டாது. இதில் பழுப்பு பாஸ்மதி அரிசியானது வெள்ளை பாஸ்மதியை விட அதிக நார்ச்சத்து கொண்ட முழு தானியமாகும்.

    கருப்பு அரிசி

    அதிக அளவு அந்தோசயினின்கள் கொண்டது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். வெள்ளை அரிசியை விட அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உடையது. எளிதில் மெல்லக்கூடியது.

    பழுப்பு அரிசி

    வெளிப்புற உமி மட்டுமே அகற்றப்பட்ட முழு தானியம் இது. நார்ச்சத்து, பி வகை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. வெள்ளை அரிசியை விட குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீடு கொண்டது.

    காட்டு அரிசி

    காட்டு அரிசி என அழைக்கப்பட்டாலும் உண்மையாக இது அரிசி அல்ல. நீர்வாழ் புல் வகையை சேர்ந்தது. புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டது. காய்கறிகள் அல்லது தானிய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    நீரிழிவு நோய்க்கு எந்த அரிசி சிறந்தது?

    நீரிழிவு நோயாளிகளுக்கு பழுப்பு, கருப்பு, சிவப்பு மற்றும் முழு தானிய பாஸ்மதி அரிசி வகைகள் ஏற்றவை. ஏனெனில் குறைந்த சர்க்கரை சத்து அளவு குறியீட்டையும், அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவி புரியும். இந்த அரிசியை அளவாக எடுத்துக்கொண்டு காய்கறிகள் போன்ற அதிக நார்ச்சத்துமிக்க உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.

    Next Story
    ×