என் மலர்
சமையல்

சமையல் எரிவாயு சிக்கன யோசனைகள்...
- சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள்.
- கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும்.
நாம் அன்றாடம் சமையலறையில் சமையலின்போது சில விஷயங்களைப் பின்பற்றினால், குறிப்பிடத்தக்க அளவு எரிவாயுவை (கியாஸ்) மிச்சப்படுத்த முடியும்.
அது பற்றி பார்க்கலாமா...
* அரிசி மற்றும் நவதானியப் பொருட்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரமே வெந்து விடும். இதனால் எரிவாயு செலவும் மிச்சமாகும்.
* முடிந்த அளவு எல்லாவித சமையல் வேலைகளுக்கும் பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள். பிரஷர் குக்கரில் ஒரே சமயத்தில் பல சமையல் பொருட்களை வேக வைக்கலாம். இதனால் எரிபொருள் செலவு குறைவதோடு, சமையல் வேலையையும் சீக்கிரமாக முடிக்க முடியும்.
* பால், குழம்பு, கூட்டு வகைகளை குளிர்பதன பெட்டியில் இருந்து அப்படியே எடுத்து கியாஸ் அடுப்பில் வைத்து சூடு பண்ணாதீர்கள். இதனால் சூடாக அதிக நேரம் ஆவதுடன், அதிக எரிபொருளும் செலவாகும். எனவே, பிரிட்ஜில் இருந்து எடுக்கும் சமையல் பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து, அதன் குளிர் குறைந்து இயல்பான தட்ப வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் சூடாக்க வேண்டும்.
* சமையலுக்குத் தேவையான காய்கறிகளை கியாஸ் அடுப்பு பற்ற வைப்பதற்கு முன்னரே நறுக்கி வைப்பது மிகவும் முக்கியம். அதுபோல் மசாலாக்களை அரைத்து கியாஸ் அடுப்பின் பக்கத்தில் வைத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் தேடி எடுப்பதால் ஆகும் எரிவாயு விரயத்தைக் குறைக்கலாம்.
* உங்கள் வீட்டு சமையலறையில் காற்று அதிகம் வீசுகிறது என்றால் ஜன்னலை அடைத்து விடுங்கள். காற்று அதிகம் அடித்தால் கியாஸ் அடுப்பின் ஜுவாலை படபடக்கும். இதனால் சமைக்க அதிக நேரம் பிடிப்பதோடு, எரிபொருளும் அதிகம் செலவாகும்.
* சமையலுக்கு குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டை போட்டு விடுங்கள். ஆவி வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். ஐந்து நிமிட கியாஸ் செலவும் மிச்சமாகும்.
* கியாஸ் அடுப்பின் பர்னர் சுத்தமாக இருந்தால் தான் தீ நீல நிறத்தில் எரியும். ஆரஞ்சு நிறத்திலோ, மஞ்சள் நிறத்திலோ எரிந்தால் பர்னர் சுத்தமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இதனால் எரிவாயு தேவையில்லாமல் பாழாவதை தவிர்க்கலாம்.
* குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது, சமையல் பொருட்களை அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதால் ஆகும் கியாஸ் செலவை குறைக்கும்.






