என் மலர்
அழகுக் குறிப்புகள்

காலை-இரவு: முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தடவ சிறந்த நேரம் எது?
- எண்ணெய்யை முழுமையாக உறிஞ்ச முடிக்கு போதிய நேரம் கிடைக்காது.
- வறண்ட தலைமுடி மற்றும் சேதமடைந்த முடி உள்ளவர்களுக்கு இரவு எண்ணெய் தடவுவது ஏற்றது.
குழந்தை பருவம் முதலே தலை முடிக்கு எண்ணெய் தேய்க்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவதொரு எண்ணெய் இடம் பிடித்திருக்கும். தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் தடவி வந்தாலும் முடி வளர்ச்சிக்கு சிறந்தது காலை நேரமா அல்லது மாலை நேரமா? என்ற குழப்பம் பலருக்கும் அடிக்கடி எழுவதுண்டு.
காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் என்று சிலர் நம்புகின்றனர். தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்திருப்பதால் முடியின் வேர் வரை ஊட்டச்சத்து கிடைக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் வாழ்க்கை முறை, முடி வகை, தேய்க்கும் நேரத்தை பொறுத்து தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் மாறுபடும்.
முடி வளர்ச்சிக்கு எண்ணெய் தடவுவது ஏன் முக்கியம்?
முடிக்கு எண்ணெய் தடவுவது தலை சருமத்திற்கு ஊட்டமளிக்கும். முடி உலர்வடைவதை குறைக்கும். முடி வேர்களை வலுப்படுத்தும், தலைக்கு மெதுவான மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சிக்கு உதவிடும். மேலும் எண்ணெய் தடவுவது முடியில் ஏற்படும் உராய்வை குறைக்கும். முடி உடைதல் மற்றும் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கும். ஆனால், எண்ணெய் தேய்ப்பது மட்டும் போதுமானது அல்ல. சீரான உணவு, நல்ல உறக்கம், மன அழுத்தமின்மை மற்றும் சரியான முடி பராமரிப்பு ஆகியவை முக்கியமானவை.
முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
உலர்ந்த அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவலாம். எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் காலை நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு குளிப்பது பாதுகாப்பானது. வாரத்திற்கு இரண்டு அல்லது 3 முறை தலைக்கு எண்ணெய் தடவினால் போதும். தலைமுடிக்கு மெதுவாக மசாஜ் செய்யவும். அதிக எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும். தலை முடியை நன்றாக அலசவும்.
காலை நேரமா இரவு நேரமா நேரத்தை விட எளிமையான, தொடர்ச்சியான பராமரிப்பே முடி வளர்ச்சிக்கு உதவிடும்.
காலை நேரத்தில்...
நன்மைகள்:
* தலைச்சருமத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
* தலைமுடி வறட்சி அடைவதை குறைக்க உதவும்.
* தலைமுடியில் லேசாக எண்ணெய் தேய்த்து 30 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை தக்கவைப்பது அதிக எண்ணெய் தலையில் சேர்வதை தடுக்க உதவும். எண்ணெய் பசைத்தன்மை மற்றும் முகப்பரு பிரச்சனை கொண்டவர்களின் தலைக்கு காலை நேரத்தில் எண்ணெய் தேய்ப்பது சிறந்தது.
குறைபாடுகள்:
* எண்ணெய்யை முழுமையாக உறிஞ்ச முடிக்கு போதிய நேரம் கிடைக்காது.
* எண்ணெய் தேய்த்தபடி வெளியே சென்றால் தூசி, மாசுக்கள் முடியில் ஒட்டும் அபாயம் உண்டு.
* வெயில் சமயத்தில் காலையில் எண்ணெய் தேய்ப்பது தலைச்சருமத்தில் அழுக்கு சேரக்கூடும்.
* தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்துவிட்டு ஷாம்பு உபயோகித்து குளிப்பவர்களுக்கு காலையில் எண்ணெய் தேய்ப்பது ஏற்றது.
இரவு நேரத்தில்...
நன்மைகள்:
* எண்ணெய் நீண்ட நேரம் தலையில் படிந்திருந்து முடிக்கு ஊட்ட மளிக்கும்.
* உலர்ந்த, சேதமடைந்த முடியை சீரமைக்க உதவும்.
* தலை முடி உலர்தல் பிரச்சனை குறையும்.
* இரவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் நல்ல உறக்கம் கிடைக்கும். மன அமைதிக்கும் உதவும்.
குறைபாடுகள்:
* சிலருக்கு சரும துளைகள் அடைபட்டு பொடுகு பிரச்சனை அதிகரிக்கலாம்.
* தலைமுடியை முழுவதுமாக மூடவில்லை என்றால் தூசி ஓட்ட வாய்ப்பு உண்டு.
* எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் பொடுகு பிரச்சனை ஏற்படலாம்.
* வறண்ட தலைமுடி மற்றும் சேதமடைந்த முடி உள்ளவர்களுக்கு இரவு எண்ணெய் தடவுவது ஏற்றது.






