என் மலர்
நீங்கள் தேடியது "Nadaswaram"
- வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.
- கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.
தஞ்சை மண்ணின் மைந்தன் ராஜராஜசோழனின் கலை நயமிக்க ஆட்சியில் மிளிர்ந்த கோவில் நகரம், கும்பகோணம்.
அங்கு அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை தலமான ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள பெட்டகத்தில், வரலாற்றுக்கு சாட்சியாக பழங்கால கல் நாதஸ்வரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது வடிவமைக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த கோவிலில் இருந்து கல் நாதஸ்வரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இன்னொன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடைகொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3.600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் 2 அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. வட இந்திய குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. ஆதி இசைக்கருவியான நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் உருவாக்கப்படுகிறது. வைரம் பாய்ந்த பாறை போன்ற மரத்தையே இதற்காக பயன்படுத்துவார்கள். கல்நாதஸ்வரம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கிவாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
கல் நாதஸ்வரத்தின் உலவுப்பகுதியானது 3 உறுதியான தனித்தனி பாகங்களாக செய்யப்பட்டு வெண்கலப்பூண் மூலம் இணைக்கப்பட்டு வெண்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் 7 ஸ்வரங்கள் இருக்கும். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்களே உண்டு. அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதிமத்திம ராகங்களை மட்டுமே வாசிக்க முடியும். இதனை 3 முதல் 3½ கட்டை சுதியில் வாசிக்க இயலும்.
சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும். கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்று கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறினார்.
மறைந்த நாதஸ்வர மேதை மன்னார்குடி பக்கிரியா பிள்ளை 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் கோவில் நாதஸ்வர வித்வானான குஞ்சுதபாதம் பிள்ளை 30 ஆண்டுகளுக்கு மேல் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பின் சுவாமிநாதன் கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.
இவர், சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சீடர். நாதஸ்வரம் மங்கள வாத்தியமாகும். இதனை நாகூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வசித்து, நாகபாம்புகளை தெய்வமாக பூஜித்த நாகர் என்ற இனத்தவரால் முற்காலத்தில் வாசிக்கப்பட்டு வந்திருக்கிறது.
நாகத்தினை போன்று நீண்டிருந்ததன் காரணமாக "நாகசுரம்" என்னும் பெயர் ஏற்பட்டது. இதில் இருந்து இனிமையான நாதம் கிடைப்பதால் பிற்காலத்தில் நாதஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "பாத சங்கிரகம்" என்ற இசை நூல், துளைக்கருவிகளின் வரிசையில் இதனை "நாகசுரம்" என்றே குறிப்பிடுகிறது.
நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகி இருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. 4 வகை வேதங்களில், சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர்.
ச,ரி,க,ம,ப,த,நி ஆகிய 7 ஸ்வரங்களும் ஆகாயத்தில் இருந்து ஒலிக்க கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு ராகத்திற்குள்ளும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன. ஒலியை கூர்ந்து நுட்பமாக கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். அவர்கள் கேட்ட ஒலியே கட்டமைக்கப்பட்டு இசையானது. முறைப்படுத்தப்பட்ட இசையை, நாதஸ்வரம் போன்ற பல்வேறு கருவிகள் நமக்கு வழங்குகின்றன.
மேலும் இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோவில் முன்னாள் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் கூறுகையில், இது 6 துளைகளை கொண்ட திமிரி வகை நாதஸ்வரம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி இந்த கல் நாதஸ்வரம் கோவிலில் வாசிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த கல் நாதஸ்வரத்தை நான் சுமார் 1 மணி நேரம் வாசித்தேன். அதைத்தொடர்ந்து தற்போது வருகிற 28-ந் தேதி எனது மகன் தமிழரசனுடன் சேர்ந்து, கோவிலின் தற்போதைய நாதஸ்வர வித்வானுடன் இந்த கல் நாதஸ்வரத்தை வாசிக்க உள்ளேன் என்றார்.
- ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார்.
- ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 42) இவரது மகள் ஜெயமித்ரா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது சகோதரி லீனா (வயது 13) அதே பகுதியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார் இவரது தம்பி மெதுஷ் (வயது 12) இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயமித்ரா வீட்டில் தனது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கும்போது அதனை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு நாதஸ்வரம் எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை ஏற்பட்டது.
இதனால் தனது பெற்றோரிடம் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள் பின்பு கற்றுக்கொடுக்க தொடங்கினர்.
இதனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாதஸ்வரம் கற்றுக்கொள்ள பயிற்சி எடுத்தார். அதன் பிறகு 2019 ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் முழு மூச்சுடன் நாதஸ்வரம் கற்றுக்கொண்டார் சிறப்பாக வாசித்தார்.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வருவதால் தன்னுடைய கவனத்தை படிப்பில் செலுத்தினார். அப்போது தான் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனால் ஜெயமித்ரா நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் கச்சிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் சீரிய முயற்சியில் அப்பள்ளியின் மாணவி ஜெயமித்ரா சென்னை மேலப்பாக்கம் பகுதியில் கடந்த 21-ந்தேதி மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்துகொண்டார்.
இதல் வெற்றி பெற்று 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் பள்ளியின் மாணவர்களின் முன்னிலையில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.






