என் மலர்
இந்தியா

பா.ஜ.க. தேசிய அளவிலான பதவிக்கு தமிழக நிர்வாகிகள் பெயர்கள் பரிசீலனை
- தேசிய பொதுச்செயலாளராக ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
- ஆலோசனையின் போது தமிழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.
மத்தியில் அசுர பலத்துடன் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அடுத்து 2029 பாராளுமன்ற தேர்தலிலும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நாட்டின் அனைத்து பகுதியிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நிதின்நபினை தேசிய செயல் தலைவராக தேர்வு செய்தது. இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தும் தேசிய அளவிலான பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடந்தது.
அகில இந்திய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோசுடன் தமிழக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.
தேசிய பொதுச்செயலாளராக ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதற்கு அண்ணாமலை, டாக்டர் தமிழிசை பெயர்களும், அதேபோல் தேசிய செயலாளர் பதவிக்கு குஷ்பு, சரத்குமார், வானதி ஆகியோர் பெயர்களும், தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கே.பி.ராமலிங்கம் ஆகியோர் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.






