என் மலர்
இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தி நாளை 2 இடங்களில் பிரசாரம்
- தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது.
- முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியணையில் அமரப்போவது யார்? என்பது நவம்பர் 14-ந் தேதி தெரியும்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு)- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப் பணியாற்றி வருகிறது.
நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விடவேண்டும் என்ற வேட்கையில் எதிர்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்)-காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.
பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை.
தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே 12 தொகுதிகளில் மோதும் நிலை உருவாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்திக்கும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது. முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் ராகுல் காந்தி பீகாரில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முசாபர்பூர், தர்பங்கா ஆகிய 2 இடங்களில் அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ரத்தோர் தெரிவித்தார்.
பின்னர் ராகுல் காந்தி தர்பாங்காவில் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.






