search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள்"

    • குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவர்சோலையை அடுத்து நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் யானை கூட்டங்கள், குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றும், இதற்கு நிரந்தர தீர்வு காண கோரியும் அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள் கடந்த 11-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 16-வது நாளை எட்டியுள்ளது.

    இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து, சீனிவாசன், வசீம் உள்பட 4 கும்கி யானைகள் இங்கு அழைத்து வரப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இருப்பினும் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று, தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டாய்மட்டம், காரக்குன்னு பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அந்த யானைகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடலூா் வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத் துறையினா், யானை விரட்டும் காவலா்கள், சிறப்புக் குழு வனக் காவலா்கள், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி கோட்ட யானை விரட்டும் பணியாளா்கள் ஆகியோா் 4 கும்கி யானைகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஊருக்குள் புகுந்த யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    • வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.

    இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.

    பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
    • யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.

    இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.

    யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன.
    • காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது.

    வடவள்ளி:

    கோவை போளுவாம் பட்டி சரகத்துக்கு உட்பட்ட நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவற்றில் 7 யானைகள் நேற்று அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

    ஆனால் குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன. அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை முட்டத்து வயல் பகுதிக்கு சென்று அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அரிசியை தின்றுவிட்டு பின்னர் பூண்டி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையே குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது. பின்னர் அங்குள்ள தனியார் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் அங்கு விளைந்து நிற்கும் சணப்பை பயிர்களை தின்று தீர்த்தது.

    அப்போது காலைநேரம் என்பதால் பூண்டி சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. இதனால் மாலைவரை வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் போலீசார் உதவியுடன் பூண்டி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி. வாகனம் உதவியுடனும் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் இரவு 8 மணிவரை காட்டு யானைகள் பாக்கு தோட்டத்தை விட்டு வெளியேவரவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 14 மணிநேரம் போராடி காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

    • கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.
    • பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே திகினாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.

    இதை தொடர்ந்து யானைகள் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தையும், டிரான்ஸ்பார்மர் கம்பத்தையும் உடைத்து சேதம் செய்துள்ளது. சத்தம் கேட்டு இரவு காவலில் இருந்த விவசாயிகள் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது 2 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை அடுத்து யானைகளை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.

    தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த 2 காட்டு யானைகளும் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன. இதன் பிறகே விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர்.

    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    அவற்றில் பெரும்பாலானவை வாட்டார் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. கடந்த வாரம் அந்த வழியாக வந்த ஒரு காரை யானை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் மிரண்ட காட்டு யானை அந்த வாகனத்தை விரட்டியது.

    வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு வந்த ஒரு காட்டு யானை, அந்த வழியாக சென்ற காரை துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் திரியும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது. அப்படி வெளியேறும் யானைகள் ரோட்டை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிகளில் வெயில் காரணமாக கடும் வரட்சி நிலவியது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கிடந்தது.

    அதே போல் வெயில் கொளுத்தியதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. இதனால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்பட்டது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வந்தது.

    இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதே போல் தொடர்ந்து வனப்பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை தூறு கொண்டே உள்ளது.

    இதனால் தாளவாடி வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதே போல் தாளவாடி வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பச்சை பசேலென இருக்கிறது.

    தொடர் மழையால் தாளவாடி வனப்பகுதிகளில் உள்ள வன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் வன விலங்குகளில் அங்கு உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் பெரும்பாலான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்தது. ஆனால் ஒரு சில யானைகள் மட்டுமே வனப்பகுதியை விட்டு வெளியேறினாலும் அவை அமைதியான முறையில் ரோட்டை கடந்து சென்று விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் தொல்லையின்றி சென்று வருகிறார்கள்.

    இதே போல் அநதியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகளிலும் யானைகள்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியேறி வந்தன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அந்த பகுதிகளில் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவது குறைந்து உள்ளது.

    • வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஆலள்ளி, மரகட்டா, ஜார்க்கலட்டி, நொகனூர், நெல்லுக்குந்தி, ஜவளகிரி, அய்யூர், அஞ்செட்டி போன்ற பகுதிகளில் தனித்தனியாக ஒற்றை காட்டு யானைகள் சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காட்டு யானைகள் தாக்கி கடந்த 2 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில், உள்ள திப்ப சந்திரம் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு உணவுத் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்துள்ளது. இரவு நேரத்தில் கிராமத்தின் அருகே வந்த காட்டு யானை, அங்குள்ள வீட்டின் முன்பு நின்ற நாய்களை பிளிறியபடி துரத்தி சென்றது.

    இந்த காட்சிகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நீண்ட நேரம் சுற்றித்திரிந்த அந்த யானை, பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது.

    இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல்அளித்தனர். விரைந்த வந்த வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், அச்சுறுத்தி வரும் காட்டுயானையை அடர்ந்தவனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கிராமப்ப குதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
    • சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிகளில் 2 ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது கிராமப்ப குதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைகளை வனத்து றையினர் கர்நாடக மாநி லத்திற்கு விரட்டினர்.

    இதையடுத்து அந்த காட்டு யானைகள் மீண்டும் கும்பளம், கடத்தூர் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு வந்து தஞ்சம் அடைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி உத்தரவின் பேரில் ஒசூர் வனசரகர் பார்த்தசாரதி தலைமையில் வன குழுவினர்கள் சூளகிரி, செட்டி பள்ளி, சானமாவு வனப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பொது மக்கள் யாரும் விவசாய நிலங்களுக்கு வரவேண்டாம், என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த நிலையில் செட்டிப்பள்ளி வனப்ப குதியில் இருந்த 2 யானைகளை வனத்து றையினர் தீவிரமாக கண்கா ணித்து வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிய ளவில் செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் காட்டை விட்டு வெளியேற முயன்றது.

    இதை அறிந்த வனத்துறையினர் அந்த யானையை குண்டு குறுக்கி, கோனேரிப்பள்ளி வழியாக சான மாவு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இதனால் அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. குளம், குட்டைகளும் வரண்டுவிட்டன.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாள வாடி, பர்கூர் வனப்பகு தியில் கடும் வறட்சி நிலவுவதால் பச்சை பச்சை என காட்சியளித்த மரம், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.

    இந்த வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு கிராமங்களு க்குள் நுழையும் யானை களால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோ ளம், வாழைமரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடும் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானை களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது.

    அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங்களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    கிராமத்துக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் நீண்ட சிரமத்திற்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, `தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    ஆனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதி முழுவதும் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகளில் நீர்களை நிரப்ப வேண்டும்.

    இதற்கென்று வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து தினமும் காலை, மாலை வேலை என இரு வேலைகளில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீர் நிரப்புவதன் மூலம் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் எண்ணிக்கை குறையும்.

    இதேபோல் வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையினர் யானை கள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன.
    • இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வாரி பாடலா வனப்பகுதியில் சீலா தோரணம் பூங்கா உள்ளது. இதன் அருகில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக குளம் ஒன்று உள்ளது.

    வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன. அப்போது அருகில் இருந்த சீலா தோரணத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    அங்கிருந்த மரங்கள் மற்றும் பூ தொட்டிகள், பூச்செடிகள் ஆகியவற்றை மிதித்து நாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

    • சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.
    • தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அருவங்காடு:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள காட்டு யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அதேநேரத்தில் சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

    இதற்கிடையே கே.என்.ஆர் மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்றிரவு குன்னூர் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்கிருந்த இலை-தளைகளை தின்றுவிட்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் ரெயில் தண்டவாள பாதைகளில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் உள்ள ரெயில் குகையினுள் புகுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரெயில்பாதை மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர நீலகிரி மலைப்பாதையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செல்ல வேண்டும், வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×