என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
- பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்த்தட்டபள்ளம், குஞ்சபனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களில் உலா வருவதுடன் அவ்வப்போது சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதுமாக உள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்து வண்டியின் அருகே சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் காரை ஒரு காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் இந்த ரோட்டில் வாகனங்களை வழிமறித்து தாக்க முயல்வதால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






