என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சவுதியில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
- இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பஸ் மீது டீசல் லாரி மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியானார்கள். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவர் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.






