என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் கடி"

    • கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார்.
    • சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (வயது 50) கூலி தொழிலாளி. இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார். அப்போது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு முனி மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முனி மல்லப்பா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோகைல் ஹுசைன். வெளிநாட்டு வகையை சேர்ந்த 'பிட்புல்' வகை நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். மன்கர்த் அருகே காரில் தனது நாயுடன் சென்றபோது திடீரென பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் காரை நிறுத்திவிட்டு அருகே போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் தனது நாயுடன் ஏறி பயணம் செய்ய முடிவு செய்தார். அந்த ஆட்டோவில் பயணித்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் ஆட்டோவில் நாய் ஏறுவதை பார்த்து உடனடியாக அதில் இருந்து வெளியேறினர். ஆனால் 11 வயது ஹம்சா என்ற சிறுவன் மட்டும் அந்த ஆட்டோவில் சிக்கி கொண்டான்.

    இதனை தொடா்ந்து சோகைல் ஹுசைனின் நாய், ஆட்டோவில் ஏறி அந்த சிறுவனை நெருங்கியது. மேலும் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை கடித்து குதற தொடங்கியது. தனது நாயை தடுக்காமல் சோகைல் கைகொட்டி சிரித்தார். ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.

    இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தொழிலதிபர் சோகைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சோகைலை கைது செய்தனர். கைதான சில மணி நேரங்களில் சோகைல் ஜாமினில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நாய் கடித்ததில் சிறுவனின் கை, தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

    • நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்வின் பிரியன் (24) என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

    எட்வின் பிரியன் நாய் கடித்ததற்கான உரிய சிகிச்சை எடுக்காததால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்வின் பிரியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

    • சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் இறந்துவிட்டது.
    • நாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. அங்கு தெருநாய்களின் தாக்குதலுக்கு அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தெருநாய் கடித்ததில் காயமடைந்த 6 வயது சிறுமி ரேபிஸ் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேஞ்சிப் பாலம் பெருவள்ளூர் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ். இவரது மகள் சியா பாரிஸ். 6 வயது சிறுமியான சியா, கடந்தமாதம்(மார்ச்) 29-ந்தேதி தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு தெரு நாய், சிறுமியை துரத்தி கடித்தது. சிறுமியின் தலை, கால் உள்ளிட்ட இடங்களில் தெருநாய் கடித்து குதறியது. சிறுமி மட்டுமின்றி அவரை காப்பாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேரையும் அந்த நாய் கடித்தது.

    தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெறி நாய் கடிக்கான தடுப்பூசி போடப் பட்டது.

    இந்தநிலையில் சிறுமி உள்ளிட்ட 6 பேரை கடித்த தெருநாய் அன்றைய தினம் மாலையில் இறந்துவிட்டது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு போடப்பட வேண்டிய அனைத்து டோஸ் மருந்துகளும் சிறுமிக்கு போடப்பட்டுள்ளது.

    2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி சியா வீட்டுக்கு திரும்பினாள். டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்தாள். நாய் கடித்ததால் சிறுமிக்கு ஏற்பட்டிருந்த காயங்களும் குணமாகிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் வந்தது.

    இதனால் சிறுமி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமிக்கு ரேபிஸ் பாதித்திருந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் சிறுமி சியா இன்று காலை பரிதாபமாக இறந்தாள். வெறிநாய் கடிக்கான அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்ட நிலையில் சிறுமி இறந்து விட்டது அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. வெறிநாய் கடித்த சிறுமி ரேபிஸ் நோய் தாக்கி பலியான சம்பவம் மலப்புரத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    2024-ம் ஆண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களில் 4-ல் ஒரு பங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஆவார்கள் என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    நாய்க்கடி பாதிப்புக்கு மருந்து இருக்கிறது என்றாலும், வெறிநாய்க் கடியால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்படும் ஒருவர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் இருந்து மீண்டு விடுகிறார்.

    ஆனால் அதுவே நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் கிருமிகள் (வெறிநோய்) நேரடியாக மூளையை தாக்கும்போதுதான் அந்த நபர் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படுகிறது. இதனை வெறிநாய்க்கடி பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.

    இப்படியாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடி பாதிப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    உலகளவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாய்க்கடி பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதன்படி, இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    நாய்க்கடி பாதிப்பில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2024-ம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 54 ஆக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் 50 ஆகவும், 2022-ம் ஆண்டில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது.
    • தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பெரியார் நகர் விவேகானந்தர் தெருவில் தேவி என்ற பெண் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறி உள்ளது.

    நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அதே பகுதியில் நான்கு பேரை அந்த நாய் கடித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் ரெட்டமலை சீனிவாசன் தெரு, ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளதாகவும் அந்த தெரு நாய்கள் கடித்து விடும் என்ற அச்சத்துடனே அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருவதாகவும் மாநகராட்சிக்கு புகார் அளித்தால் ஊழியர்கள் வந்து நாயை பிடித்து சென்று திரும்பவும் அந்த பகுதியிலேயே விட்டு விடுவதாகவும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடை செய்யப்படும்.
    • வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்த நிகழ்வினைத் தொடர்ந்து பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1. பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும்.

    2 ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.

    3. பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும்.

    4. நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும். செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

    5. தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது தடுக்கப்படும்.

    6. பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடை செய்யப்படும்.

    7. இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்.

    8. செல்லப்பிராணி உரிமையாளர்கள் ஆர்வலர்கள் மற்றும் குடிமை முகமைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சட்ட நிலைகளுக்கு அப்பால் சென்று உரிமையாளர்களால் கட்டுப்படுத்தப்படாத விலங்குகளால் ஏற்படும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    9. பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும். மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும். இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.

    10. வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    11. கால்நடை மருத் வர்களின் அறிவுறுத்தலின்படி உரிமையாளர்கள் நாய்களை பராமரிக்க வேண்டும்.

    12. அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும்.

    13. விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
    • நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நொய்டாவில் உள்ள செக்டார் 107ல் உள்ள லோட்டஸ்-300 சொசைட்டியில் சிறுமியை நாய் கடித்துள்ளது. மே 3-ந்தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த முழு சம்பவமும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அந்த வீடியோவில், லிப்டிற்குள் இருக்கும் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வருகிறார். பின்னர் லிப்ட் 2-வது மாடியில் நின்றதும் ஒரு செல்லப்பிராணி லிப்ட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த சிறுமியைக் கடிக்கிறது.

    சிறுமியை நாய் கடித்தபோது ஒரு நபர் லிப்டிற்குள் சென்று நாயை விரட்டியடித்து, சிறுமியை மேலும் நாய் கடியில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.

    லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.

    சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு செல்லப்பிராணி நாய்களால் தாக்கப்பட்டதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாயை அங்குள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • ஒரு சம்பவத்தில் நாயின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஐதராபாத் மதுரா நகர் அருகே உள்ள ரகமத் நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் வீட்டில் வெளிநாட்டு வகை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

    அந்த நாயை தெருவில் நடை பயிற்சிக்காக அழைத்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தனுஞ்சய் என்பவரை நாய் திடீரென கடித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த தனுஞ்சய் நாயின் உரிமையாளர் ஸ்ரீநாத்திடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த தனுஞ்சய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சேர்ந்து ஸ்ரீநாத்தை உருட்டு கட்டைகளால் அடித்து தாக்கினர்.

    மாறி மாறி தாக்கியதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஸ்ரீநாத்தின் தாய் மற்றும் சகோதரி இதனை தடுக்க முயன்றனர். அவர்களையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

    மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான நாயை உருட்டு கட்டையால் தலையில் அடித்தனர். இதில் நாய் சுருண்டு விழுந்தது. இது பற்றிய தகவலறிந்த மதுரா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    ஸ்ரீநாத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாயை அங்குள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் இது தொடர்பாக தாக்குதல் மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை நாய் கடிப்பது மற்றும் நாயின் உரிமையாளரை தாக்கும் பதற வைக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை சாலை, பூங்காக்களில் நடை பயிற்சிக்காக அழைத்துச் செல்லும்போது அந்த நாய்கள் பொது மக்களை கடித்து காயப்படுத்துகின்றன.

    இதுபோன்ற ஒரு சம்பவத்தில் நாயின் உரிமையாளர் கடுமையாக தாக்கப்பட்டது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



    • உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன.
    • பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். அதில் பல்வேறு நாய்களை அடைத்து வைத்து பராமரித்து வந்தார். அதுமட்டுமின்றி வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்க முடியாத நாய்களை இங்கு கொடுத்துவிட்டு செல்லும் நிலையில் அதற்கான பணத்தை பெற்று பிரியா அந்த நாய்களை பராமரித்து வந்துள்ளார். இதனால் அந்த வீட்டில எப்போதும் அதிக அளவில் நாய்கள் இருந்து வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நாய்கள் பராமரிக்கப்படாமல் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் பிரியாவும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் நாய்களுக்கு முறையாக உணவுகள் ஏதும் வழங்கப்படாமல் அவை குரைக்கத்தொடங்கின. மேலும் அதன் மலம்,சிறுநீர் சுத்தப்படுத்தப்படாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாய்களுக்கு வழங்கப்பட்ட மீதி இருந்த இறைச்சிகள் அழுகிகிடந்தன. மேலும் உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன. பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டு கிடந்தன. இதனை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் தங்களது மாடியில் இருந்து நாய்களுக்கு உணவுகளை வீசினர்.

    இதற்கிடையே கடும் துர்நாற்றம் மற்றும் நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தனியார் தொண்டு நிறவனத்தினரிடம் தெரிவித்தனர்.


    இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரிய அமைப்பில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் மதனகோபால் தலைமையில் தனியார் விலங்குயகள் நல ஆர்வலர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் பரிதாபமான நிலையில் நாய்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    3 ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டின் அறைகள், மொட்டை மாடி மற்றும் வீட்டின் பாதை அனைத்தும் நாய்களின் மலம், சிறுநீர் மற்றும் அழுகிய உணவுகளால் துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான நாய்களுக்கு தோல் அலர்ஜி நோய், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டதில் அதன் உடல்களில் காயம் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கிருந்த 18 நாய்களை மீட்டனர். இதுபற்றி பராமரிப்புக்காக விட்டுச்சென்ற அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களது நாய்களை மீட்டுச்சென்றனர். மேலும் உரிமையாளர்கள் வராத நாய்களை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், தனியார் விலங்குகள் நல பராமரிப்பு மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டை வாடகைக்கு எடுத்து நாய்களை பராமரித்து வந்த பிரியா எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரிடம் மனிதாபிமானமற்று நாய்களை பராமரிக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மதன் குமார் என்பவர் கூறும்போது, இங்கு 30 நாய்கள் வரை இருந்தன. ஆனால் அதனை உரிய முறையில் பராமரிக்கவில்லை. நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.

    • மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர்.
    • பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது.

    நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கு வந்த கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, "இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக கொடுப்பதே தெருநாய்கள் தொல்லைக்கு காரணம் என்று கூறி அந்த பகுதியில் உள்ள 44 இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார்.

    மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர். மேலும், இனி அந்த பகுதியில் இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது என்றும் மேயர் பிரமிளா பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
    • மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

    நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.

    நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.


    நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.

    இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

    ×