search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dog bite"

    • மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் பங்களாதெரு, சத்யாநகர்,மீரான் பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 15 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தினார். அப்போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் கலைச்செல்வி செண்பகராஜ், வார்டு செயலாளர் சங்கரலிங்கம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி கிராமங்களில் நாய்கள் அதிகமாய் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நெய்வேலி கடை வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 24), மருதேஷ், நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரன், ஆகிய மூவரையும் சுற்றி திரிந்த வெறிநாய் கடித்தது.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
    • கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

    இந்த நிலையில் கண்ணூர், முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளி மாணவன் நிஹால் நிஷாத் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். பல இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நிஹால் நிஷாத், அப்பகுதியில் உள்ள சாலையோரம் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதை ஊர் மக்கள் பார்த்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவனை தெருநாய் கடித்து குதறி இருப்பதாக தெரிவித்தனர். இதில் கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த நிஹால் நிஷாத்தின் உறவினர்கள், சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பின்னரே சிறுவனின் உடல் அடக்கம் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

    கண்ணூர் சிறுவன் நிஹால் நிஷாத் தெருநாய் கடித்து இறந்தது குறித்து குழந்தைகள் நல கமிஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இச்சம்பவம் குறித்து மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

    தெருநாய்கள் கடித்து நிஹால் நிஷாத் பலியான பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல 2 குழந்தைகளை தெருநாய்கள் கடித்த சம்பவம் நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த 2 குழந்தைகளும் படுகாயங்களுடன் தப்பிவிட்டன. இப்போது நிஹால் நிஷாத் நாய் கடித்து இறந்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 32 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதனால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விலங்குகள் நல சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டும் போதாது அவற்றின் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.
    • இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் அஞ்சலி, பிரவீன், தமிழ்ச்செல்வன், பிரவீனா ஆகிய 4 பேரையும், நேற்று மாலை அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.

    மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்டிபட்டி பகுதியில் இறைச்சி கடைகள் முன் கூட்டமாக திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
    • மாவட்டத்தில் 7,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. 53 மருந்தகங்களில் 2650 வெறிேநாய் தடுப்பூசிகள் உள்ளன.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி பகுதியில் இறைச்சி கடைகள் முன் கூட்டமாக திரியும் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை விரட்டி கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர். கொண்டமநாயக்கன்பட்டி காலனி பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்ததில் வடிவேலு (வயது 47), காமராஜ் நகர் லக்‌ஷனா (12), விஜயகுமார் (14), வரதராஜபுரம் திருமுருகன் (43), சிவா (27), லெனின் விஜய் (2), விஜயபூபதி (18), ஈஸ்வரன் (17), தேவி (34), செல்வம் (45), செல்வக்குமார் (27) உள்பட 27 பேர் படுகாயமடைந்தனர்.

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நல்லகருப்பன்பட்டியில் முனிசாமி (45), சுப்பிரமணி (69), சுப்புராஜ் (70), மல்லிகா (25) உள்பட 10 பேரை வெறிநாய் விரட்டி கடித்தது. இதில் காயமடைந்த அவர்களுக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மாவட்டத்தில் 7,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. 53 மருந்தகங்களில் 2650 வெறிேநாய் தடுப்பூசிகள் உள்ளன. ஆண்டிபட்டி மற்றும் சில்வார்பட்டி பகுதியில் நாய்கள் கடித்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள வன பகுதியாகும்.

    இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அங்குள்ள நீர்நிலைகள்வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக மான்கள் ஊருக்குள் வருகின்றன. அப்படி அவை வரும் போது நாய்கள் மான்களை துரத்தி கடிக்கின்றன.

    இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்து விட்டது. மானை கண்ட நாய்கள் துரத்தி சென்று மானை கடித்தன. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் பொதுமக்கள் வனப்பகுதியில் வன உயிரினங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அரசு தண்ணீர் வசதி செய்து தர வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சி அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள அய்யாக்குட்டி வலசு, செம்மடைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (76). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை முத்துச்சாமி தனது 9 வெள்ளாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. முத்துசாமியின் ஒரு ஆடு காயங்களுடன் உயிர் பிழைத்தது.

    இதே பகுதியில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் 2 வெள்ளாடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது. இறந்த ஆடுகளை கடலைக்காட்டுபுதூர் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய் ஆகும். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

    குலசேகரத்தில் 2 பெண்களை வெறிநாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    குலசேகரம்:

    குலசேரகம் அரசமூடு விளையாட்டு மைதானம் பகுதியில் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த கழிவுகளை உண்பதற்காக இந்த பகுதியில் ஏராளமான நாய்கள் இங்கு சுற்றித்திரிவது வழக்கம். இவற்றில் பல நாய்கள் வெறிபிடித்து அலை கின்றன. மேலும் இந்த வெறி நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் சென்றாலும் இதுவரை அந்த வெறி நாய்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் இந்த வெறி நாய்கள் கடித்து 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குலசேகரம் காவஸ்தலம் தொட்டிப்பாலம் செட்டி தெருவை சேர்ந்தவர் கீதாமணி (வயது 60). இவர் தொட்டிப்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த ஒரு வெறி நாய் அவரை விரட்டி, விரட்டி கடித்தது.

    இதில் அவருக்கு கை உள்பட உடலில் பல இடங் களில் படுகாயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து வெறி நாயிடம் இருந்து அவரை காப்பற்றினார்கள். அங்கிருந்து தப்பியோடி அந்த வெறி நாய் அதே பகுதியை சேர்ந்த வசந்தா (65) என்ற பெண்ணையும் கடித்து குதறியது. மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் அந்த வெறி நாய் கடித்தது.

    வெறி நாயின் அட்டகாசத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நாயை அடித்து கொன்றனர். வெறி நாய் கடித்த பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சாலையில் திரிந்த நாய்களும் வெறி நாயால் கடிக்கப்பட்டுள்ளதால் அந்த நாய்களும் வெறி நாய்களாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் விளையாட்டு மைதானம் பகுதியிலும் பல வெறி நாய்கள் சுற்றித்திரிவதால் இவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வெறி நாய்களை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×