என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் உயிரிழப்பு"

    • விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு(வயது20). இவர், மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில், என்ஜினீயரிங் கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த விஷ்ணு, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    நேற்று காலை விஷ்ணு, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அங்கு வந்த போலீசார், விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    போலீசார் பள்ளி வளாகத்தை சுற்றி பார்வையிட்டபோது அங்குள்ள சுவரில் 'என் சாவுக்கு காரணம் பாபு' என எழுதப்பட்டு இருந்தது. இதை விஷ்ணு எழுதி வைத்திருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    பெயரின் முன்பு 'J ' என்ற இன்ஷியலும் எழுதப்பட்டு இருந்தது. இதை வைத்து போலீசார் யார் அந்த பாபு? என விசாரித்தபோது, பாபு அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விஷ்ணு எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கல்லூரி மாணவர் விஷ்ணு மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அரசு பள்ளி ஆசிரியர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

    தனது உயிரிழப்புக்கு ஆசிரியர் தான் காரணம் என உயிரிழந்த கல்லூரி மாணவர் விஷ்ணு சட்டை பையில் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது.
    • தினேஷ் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஜல்லுத்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தினேஷ் (வயது15). இவர் சித்தேரி உண்டு உறைவிடப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷை நாய் கடித்துள்ளது. இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
    • நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.

    நேற்று நடந்த மாணவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.

    நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.

    மேலும், அவ்வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து நம்பிக்கையளிக்கும் விதமாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
    • இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. மாணவர் யுவராஜ் அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு, கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்றும், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

    துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த ஜூன் 11-ஆம் நாள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மாணவர் யுவராஜ் எவ்வாறு விடுதி அறையின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்? என்று சக மானவர்களும், யுவராஜின் பெற்றோரும் எழுப்பும் வினாக்களுக்கும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.

    அதுமட்டுமின்றி, மாணவர் யுவராஜ் மர்மமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் தினத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் தமது தாய், தந்தையருடன் தொலைபேசியில் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இந்த மாதிரிப் பள்ளி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியில் அனைத்து சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு, மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சூழல் அங்கு இல்லை.

    திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக மாணவர் யுவராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் மாணவர் யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
    • உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.

    அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு டாக்டர்களை அணுகி அவர்களின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே உடல் பயிற்சி உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கிடையே இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.

    யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சஞ்சய் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
    • மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி ரோட்டில் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் (வயது 18). இவர் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். அதே கல்லூரியில் கரூர் மாவட்டத்தை மாணவி தாய்-தங்கையுடன் கல்லூரி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மாணவன் சஞ்சய் மாணவியை பார்ப்பதற்காக அடுக்குமாடி சென்றுள்ளனர். இருவரும் மொட்டைமாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென மாணவியின் தாய் எழுந்து பார்த்தபோது மகளை காணாமல் திடுக்கிட்டார். இதனால் அவரை தேடி தேடி மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு மகள் சஞ்சயுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத சஞ்சய் அங்கிருந்து செல்வதற்காக 50 உயரமுள்ள மாடியில் இருந்து குதித்தார். இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் அஸ்தம்பட்டி சரக காவல் உதவி ஆணையாளர் லட்சுமி பிரியா ,இரவு ரோந்து பொறுப்பு காவல் உதவி ஆணையாளர் பாபு, கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் பயின்ற போதே சஞ்சய்க்கும் அந்த மாணவிக்கும் இடையே காதல் இருந்து வந்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்ததும் தெரியவந்தது.

    மகன் இறந்தது குறித்த தகவல் அறிந்த சஞ்சையின் பெற்றோர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து சஞ்சய்யின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சஞ்சய் இறந்த செய்தியை அறிந்த உடன் தங்கி இருந்த மற்றும் கல்லூரியின் சக மாணவர்கள் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாமல்லபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • ராட்சத அலையில் சிக்கி வெங்கட ரோஹித் கடலுக்குள் மூழ்கினார்.

    மாமல்லபுரம்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட ரோஹித் (வயது 19). இவர் மாமல்லபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் அவர் கல்லூரி நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி வெங்கட ரோஹித் கடலுக்குள் மூழ்கினார்.

    நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மீனவர்கள் உதவியுடன் மாமல்லபுரம் போலீசார் கடலில் மூழ்கிய மாணவரை தேடி வருகின்றனர்.

    • மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
    • 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அங்கு, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

    மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    • இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 20) மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சரவண குமார் (18) ஆகிய இருவரும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மனோஜ் மற்றும் சரவண குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேட சின்னனூர் என்ற இடத்தில் இருவரும் எல்.பி.பி கால்வாயில் இறங்கி குளிக்க சென்றனர்.

    அப்போது மனோஜ் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அதைப் பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

    அதில் சரவணகுமார் என்பவரை காப்பாற்றி விட்டனர். மேலும் மனோஜ் என்பவர் நீரின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டதால் மனோஜ் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தனி பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மனோஜின் பிரேதத்தை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரபி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 6-ம் தேதி ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரம்மி விளையாடினார். இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.
    • மனமடைந்த மாணவர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 20). இவர் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 6-ம் தேதி ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரம்மி விளையாடினார். இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார். வங்கி கணக்கில் பணம் இல்லாத கண்டு அவரது பெற்றோர் கேட்டுள்ளனர்.

    அதில் மனமடைந்த மாணவர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு ஆத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தினார்.

    மேல் சிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்து உள்ளார்.
    • அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார்.

    துமகூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத் (வயது 22). பி.யு.சி. 2-ம் ஆண்டு மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீபகாலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்து உள்ளார்.

    அந்த படத்தில் அனுஷ்கா தனது தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்து கொள்வார். பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார்.

    இதில் உடல்கருகி அவர் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரேணுகா பிரசாத் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஐ.டி.ஐ. மாணவர் வீட்டில் நேற்று மாலை மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
    • விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    செய்யாறு:

    செய்யாற்று வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் செய்யாறு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் வயர்மேன் எலக்ட்ரீசியன் படித்து வந்தார்.

    நேற்று மாலை இவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக விக்னேஷ் சுவிட்ச் போர்டில் கை வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட உறவினர்கள் விக்னேசை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×