என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள்
    X

    அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த போலீஸ் உயர் அதிகாரிகள்

    • போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.
    • சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேசை விசாரணை அதிகாரியாக நியமித்து வருகிற 8-ந்தேதி அஜித்குமார் கொலை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவிட்ட மறுநாளே (2-ந்தேதி) நீதிபதி தனது விசாரணையை தொடங்கினார். இதற்காக திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல்நாளில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசார் நீதிபதியிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 2-வது நாளில் அஜித்குமார் தாய், அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது. 3-வது நாளான நேற்று அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

    4-வது நாளான இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. காலை 9 மணியளவில் திருப்புவனம் வந்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரடியாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி சரிபார்த்தார்.

    தொடர்ந்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது முதல் இறக்கும் வரை போலீசார் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்பட்டது.

    நீதிபதி விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை கேட்டார். அதனை எதிர்பாராத போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.

    இன்றைய விசாரணையில் சஸ்பெண்டு செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், ஏ.டி.எஸ்.பி. சுகுமாறன் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மானாமதுரை ஏ.டி.எஸ்.பி. போலீஸ் அலுவலக போலீசார், திருப்புவனம் போலீசார் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.

    அவர்களிடம் நிகிதா கொடுத்த புகார், அஜித்குமாரை விசாரணை செய்ய உத்தரவு கொடுத்த அதிகாரி, தாக்குதலில் இறந்த பின் உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் போன்றவை குறித்து நீதிபதி விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது.

    ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனை 8-ந்தேதி நீதிபதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேவைப்படும் பட்சத்தில் மேலும் கால அவகாசம் கேட்கவும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முடிவு செய்துள்ளார்.

    Next Story
    ×