என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: கைதான 5 தனிப்படையினரை தொடர்ந்து மேலும் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் பாயும் நடவடிக்கை
- ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
- மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு நேரடியாக சம்பவ இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்த மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
இதன் தொடர்ச்சியாக அஜித்குமார் மர்ம மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அஜித்குமாரை அடித்துக் கொலை செய்ததாக குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேரையும் கொலை வழக்கில் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று போலீசார் நடத்திய கொடூரமாக தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று 9½ பவுன் நகை திருட்டு போனதாக நிகித்தா என்பவர் சென்னையில் செல்வாக்குமிக்க ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திற்கு திருட்டு போன நகையை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
உடனடியாக சண்முக சுந்தரம் தனது கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை அனுப்பி இந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த 5 போலீசாரும், கோவில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முதலில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அங்கு வைத்து சரமாரியாக தாக்கியதால் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். அஜித்குமார் நண்பர்கள் அருண்குமார், லோகேஸ்வரன், சகோதரர் நவீன்குமார் ஆகியோரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் தாக்கியுள்ளனர்.
அதற்குப் பின்னரும் திருடப்பட்ட நகை தொடர்பாக எந்த விவரமும் தெரியவராத நிலையில் ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத அஜித்குமார், தான் மடப்புரம் கோவிலுக்கு பின்பக்கம் உள்ள அலுவலகத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் நகையை ஒளித்து வைத்திருப்பதாக தெரிவித்ததாகவும் அதனால் தாங்கள் அஜித்குமாரை அங்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் முதலில் தெரிவித்தனர்.
அங்கு சென்ற பின்னர் நகை எங்கே என்று கேட்டபோது அடி தாங்க முடியாமல்தான் அப்படி கூறியதாக அஜித்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில் தான் எந்த நகையையும் திருடவில்லை என்று கதறி அழுதுள்ளார். தங்களை ஏமாற்றியதாக கூறி ஆத்திரமடைந்த தனிப்படை போலீசார் கையில் கிடைத்த பிளாஸ்டிக் பைப் மற்றும் இரும்பு ராடு போன்றவற்றால் அவரை கடுமையாக தாக்கியதாகவும் அப்போது அவர் அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது.
அஜித்குமார் அலறல் சத்தத்தை தாங்கள் கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அவர் கடுமையான காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை அவசர அவசரமாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் தனிப்படை போலீசார் சேர்த்துள்ளனர். அவர் உயிரிழந்ததும் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்திருக்கிறது.
ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை போலீசார் திருப்புவனம் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் 9½ பவுன் நகை திருட்டு தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடுமையாக விசாரிக்க உத்தரவிட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையின் கண்டனத்தை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்புடைய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த நகை மாயமான வழக்கில் போலீசார் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.






