என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நிகிதாவை கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி
    X

    நிகிதாவை கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி

    • காவலாளி அஜித்குமார் நிகிதாவிடம் 500 ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • அஜித்குமார் நகையை திருடியதாக நிகிதா அளித்த புகார் மீதும் சந்தேகப் பார்வைகள் விழுந்துள்ளன.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே இருந்து வருகிறது.

    கொலையுண்ட வாலிபர் அஜித்குமார், காரில் இருந்த தனது 10 சவரன் நகையை திருடிவிட்டதாக பேராசிரியையான நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். இதன் பேரிலேயே போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் வாய்மொழி உத்தரவின் பேரில் அடித்து விசாரித்த போதுதான் வாலிபர் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேராசிரியை நிகிதா தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பிறகே வாலிபர் அஜித்குமார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

    இந்த நிலையில் நிகிதா மோசடி பேர் வழியாக வலம் வந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த நிகிதா தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அவர்களில் ஒருவர் மதுரையில் பிரபலமான அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.

    அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் பலருடன் பழகி நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ள நிகிதா தனது இந்த செல்வாக்கை பயன்படுத்திதான் நினைத்ததை சாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதன்படியே வாலிபர் அஜித்குமார் விஷயத்திலும் அவர் நடந்து கொண்டிருப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    காவலாளி அஜித்குமார் நிகிதாவிடம் 500 ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே அஜித்குமாரை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நிகிதா தனது செல்வாக்கை பயன்படுத்தி அடித்து விசாரணை நடத்த அறிவுறுத்தினாரா? என்கிற கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நிகிதா வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.66 லட்சம் வரையில் மோசடி செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இதனை தொடர்ந்து அஜித்குமார் நகையை திருடியதாக நிகிதா அளித்த புகார் மீதும் சந்தேகப் பார்வைகள் விழுந்துள்ளன.

    நகை எதுவும் திருட்டு போயிருந்தால் அந்த நகை தற்போது எங்கே? அதனை போலீசார் தேடி கண்டுபிடிக்காதது ஏன்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்கள், வாலிபர் அஜித் குமார் மீது அளிக்கப்பட்டது பொய் புகார்தானா? என்கிற கேள்விகளையும் பரவலாகவே முன்வைத்து இருக்கிறார்கள்.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் வாலிபரின் குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலரான ஹென்றி, நிகிதாவின் கடந்த கால செயல்பாடுகள் அவர் அளித்த புகார் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மதுரையை சேர்ந்த வக்கீல் திருமுருகனும் என்பவர் வாலிபர் அஜித்குமார் மீது கூறப்பட்டது பொய் புகார் என்றே குற்றம் சாட்டி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து நிகிதாவை கைது செய்து உரிய முறையில் விசாரணை நடத்தாதது ஏன்? என்கிற கேள்விகளையும் கேட்டுள்ள சமூக ஆர்வலர்கள் அஜித்குமாரின் கொலைக்கு காரணமான அனைவரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வாலிபர் அஜித்குமார் மீது நிகிதா அளித்தது பொய் புகாரா? என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் முடிவில் பொய் புகார் அளித்தது உண்மைதான் என தெரிய வந்தால் அவர் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.

    அதே நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரணை நடத்தும் போதும், நிகிதா சிபாரிசுக்காக யார்-யாரிடம் பேசினார் என்பது பற்றிய தகவல்களை திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×