என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? - நீதிமன்றம் சரமாரி கேள்வி
- பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
- யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் விவரம்:-
* அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள், ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை.
* `ஏன் இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்?
* பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை?
* யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.
* சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அஜித்குமாரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து விசாரிக்கும் வீடியோவை நீதிபதி முன்பு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீடியோவை எடுத்த நபர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






