என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? - அர்ஜுன் சம்பத்
- சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.
- இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
தேனி:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படும் நிகழ்வாகும். இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
திருப்புவனத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று 'சாரிம்மா' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்க தயங்குகின்றனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
த.வெ.க. தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது அவர்களின் விருப்பம். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதும், இணையாமல் இருப்பதும் அவர்களது விருப்பம்.
ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைந்த சிலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.