அஜித்குமார் தாயாரிடம் பலமுறை மன்னிப்பு கேட்பேன் - ஆடியோ வெளியிட்ட நிகிதா

பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதலமைச்சரும் தெரியாது.
அஜித்குமார் தாயாரிடம் பலமுறை மன்னிப்பு கேட்பேன் - ஆடியோ வெளியிட்ட நிகிதா
Published on

மதுரை:

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது நிகிதா தலைமறைவாக உள்ளார். அவருடைய வீடும் பூட்டிக்கிடக்கிறது.

இந்தநிலையில் நிகிதா பேசி வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:- `இதனை மிகவும் வேதனையுடன் நான் வெளியிடுகிறேன். பெண் ஒருவர் பல்வேறு பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டம் முடித்து கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து சமூகத்தில் மிக உயரிய பொறுப்பிற்கு வருவது மிகப்பெரிய சவால்.

பெண்ணின் வளர்ச்சியை சமூகத்தில் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. அஜித்குமார் இறந்தது மிகவும் வேதனையான சம்பவம். சம்பவத்தன்று புகார் தெரிவித்ததோடு நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். அதன்பின் என்ன நடந்தது என தெரியாது. என்னுடைய தந்தை முக்கிய பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு 2011-ம் ஆண்டு பலதரப்பினரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக புகார் வந்துள்ளது. ஓய்வு பெற்ற பின்பு ஒரு அதிகாரிக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது இந்த சமூகத்தில் தெரிந்த ஒன்று.

அப்படி இருக்கும்போது இந்த குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். திண்டுக்கல்லில் கல்லூரியில் பணியாற்றி வரும் நான் ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு சென்றுவிட்டு தொடர்ந்து விடுப்பில் உள்ளேன். எனது தாய் கீழே விழுந்து அடிபட்டு பேச முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு உதவியாக உள்ளேன்.

தற்போது எனக்கு சோதனையான காலம். என்னை பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த வாழ்க்கையை பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு பெரிய அதிகாரிகள் மற்றும் தமிழக முதலமைச்சரை நன்கு தெரியும், அதை பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனக்கு எந்த பெரிய அதிகாரிகளும், முதலமைச்சரும் தெரியாது. என்னை பற்றி வேண்டுமென்றே தி.மு.க. நிர்வாகி ஒருவர் தூண்டிவிட்டு வருகிறார். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது. இது முற்றிலும் வேதனையான நேரம். அஜித்குமார் இறந்ததற்கு அவருடைய தாயாரிடம் நான் பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசி உள்ளார்.

இதற்கிடையே நிகிதா தன் மீதான மோசடி வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கோவையில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com