என் மலர்
இந்தியா

தவறான ரத்தம் செலுத்தியதால் 6 குழந்தைகளுக்கு HIV பாதிப்பு - மருத்துவர் உட்பட 3 பேர் இடைநீக்கம்
- 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு ரத்தக்கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 16-ம் தேதி 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது
அக்குழு தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி, நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முறையான பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.






