search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tribal people"

    • பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    ராம்கோ குழுமத்தின் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்கான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் ஏற்பாட்டில், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவரின் அறிவுறுத்தலில் செயலர் நீதிபதி இருதய ராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பழங்குடியின சாதி சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006-ன் படி இண்டு நார் சேகரிக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    பின்னர் நீதிபதி இருதய ராணி கூறியதாவது:-

    'ஒவ்வொரு பழங்குடியின கிராமமாக சென்று அவர்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம். விருது நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அழைத்து வருகிற 24-ந் தேதி கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோ சிக்கப்படும். உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    • பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர்.

    சென்னை:

    சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தங்களுக்கு டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர். பணம் கொடுத்து தானே டிக்கெட் கேட்கிறோம் என கூறிய அவர்கள், டிக்கெட்டை வைத்துகொண்டே இல்லை என கூறிய காரணம் என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

    சமீபத்தில் ரோகிணி திரையரங்கிற்கு 'பத்து தல' படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர்.
    • பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அனந்தகிரி மண்டலம் காசி பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் உள்ள புளிய மரத்தில் இந்த ஆண்டு புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

    மலை கிராமத்தை சேர்ந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் புளியம் பழங்களை சேகரித்து மூங்கில் கூடைகளில் அடைத்து டோலி கட்டி மலையிலிருந்து கீழே கொண்டுவந்து சந்தை மைதானத்தில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

    சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமான திரண்டு வந்து புளியை வாங்கி செல்கின்றனர். இதனால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் புளி வியாபாரம் செய்து வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

    • பழங்குடி இன மக்கள் 18 பேருக்கு பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டுவதற்கான பணிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள் 18 பேருக்கு பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டுவதற்கான பணிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக வானூர் ஒன்றிய குழு தலைவர் உஷா முரளி கலந்து கொண்டு 18 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கி பேசினார். விழாவில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளி, கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், ஊராட்சி செயலர் ஏழுமலை, வார்டு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பாரம்பரிய பாடலுடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தை காக்கும் வகையில் வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    இதில், வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் நடும் விழாவை தொடக்கி வைத்தாா்.

    தொடா்ந்து படுக இன மக்கள் தங்களின் பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மரம் வளா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

    விழாவில் 2022 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.ஒவ்வொரு மரத்தையும் தங்களின் குழந்தைகளின் பெயா் சூட்டி வளா்க்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மரத்தினால் ஏற்படும் நன்மைகள், வனங்கள் ஏன் காப்பாற்றபட வேண்டும் என்பது குறித்து நாக்கு பெட்டா சங்கம், ஈஷா அறக்கட்டளை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில், கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவா் சச்சின் துக்காராம் போஸ்லே மற்றும் வன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கடந்த 6 மாதமாக இங்கு பி.எஸ்.என்.எல் சிக்னல் போதிய அளவில் கிடைப்பது இல்லை.
    • காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை பகுதி உள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடை மூலம் கெம்மாரம்பாளையம், நெல்லித்துறை ஊராட்சிகளுக்குட்பட்ட சேத்துமடை, கொடியூர், நெல்லிமரத்தூர், பூச்சிமரத்தூர், செங்கலூர், திட்டுக்குலை, குண்டையூர், கடம்பன்கோம்பை, நீராடி, பில்லூர், கீழ் பில்லூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 600 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதமாக இங்கு பி.எஸ்.என்.எல் சிக்னல் போதிய அளவில் கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் மக்கள் செல்போனே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ரேசன் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு கடையில் குடும்ப அட்டை தாரர்களிடம் கைரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மலை கிராமங்களில் இருந்து வரும் குடும்ப அட்டைதாரர்கள் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதிலும் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டுமே ரேசன் வழங்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால் பழங்குடியின மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் டவர் ஏற்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ரேசன் பொருட்கள் வாங்க வந்த மக்கள் மழையில் நனைந்தபடி காத்திருந்த நிலையில் கைரேகை பதிவு செய்யும் எந்திரத்தில் இணையவழி சேவை கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் பில்லூர் அணை பகுதியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போதிய இணையதள வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் தனியாக டவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுதொடர்பாக தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மானார் பகுதியில் தற்போது பி.எஸ்.என்.எல் டவர் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அப்பகுதியில் ஏற்கனவே ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க்குகள் முழுமையாக கிடைத்து வருகின்றன. எனவே மானார் பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ள பி.எஸ்.என்.எல் டவரை பில்லூர் அணை பகுதியில் ஏற்படுத்தினால் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் பயன் பெறுவர் என கூறினர்.  

    • காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஓரக்கொம்பு கிராமத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த்துறை யு.ஜி.சி சிறப்பு ஆய்வு திட்டத்தின் சார்பில் உலக தொல்குடிகள் நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை வகித்து பேசியதாவது,

    பளியர், பழங்குடியின மக்கள் பல்வேறு போராட்டங்களை கடந்து வாழ்ந்து வருகின்றனர். நவீன வளர்ச்சிகள் பெருகினாலும் எந்த ஒரு இனமும் தனது பாரம்பரியத்தை இழந்துவிடக்கூடாது. உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது.

    ஆனால் பளியர் சமூக மக்கள் கடுமையான உழைப்பாளிகளாவும், நடைப்பழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களிடம் உடல் பருமனான ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை என்றார்.

    எழுத்தாளர் முத்துநாகு சிறப்புரையாற்றி பேசுகையில்,

    பழங்குடியின மக்களில் பளியர், புழையர், முதுவர் ஆகிய 3 இன மக்கள்தான் சுற்றுச்சூழலை நன்கு அறிந்தவர்களாகவும், தங்களை சுற்றி இருக்கின்ற தாவர இனங்களை அடையாளம் காண்கின்ற மரபு அறிவு உடையவர்களாகவும் உள்ளனர். ஒரு குடும்பத்திற்கு 12 ஏக்கர் நிலம் வரைக்கும் ஒதுக்கீடு செய்யலாம் என வனச்சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. பழங்குடியின மக்கள் மரபானஅறிவினை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    அதேபோல பழங்குடியினருக்கான உரிமைகளை பெறுவதற்காக ஊர்தலைவர் ஒருங்கிணைப்பின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பங்கேற்று பழங்குடியினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.

    பேராசிரியர் முத்தையா, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர் முருகன், கே.சி.பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, இளையராஜா, வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, குழந்தைகள் இல்லச்செயலாளர் ஸ்டான்லி மனோகரன், கொரன்கொம்பு வனக்குழு தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற குழுச்செயலாளர் முருகேசன், சதாசிவம், எழுத்தாளர் பாரததேவி, பேராசிரியர் ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊர்தலைவர் சங்கர் நன்றி கூறினார். விழாவை முன்னிட்டு பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாறைப்பட்டி நல்லூர்காடு, கோரம்கொம்பு, கள்ளக்கிணறு, கருவேலம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பல்கலைக்கழகத்தின் குழல்இசைக்கருவிகள் வழங்கப்பட்டன.

    • திருச்சி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசு மாடுகள் பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
    • இந்த பசுகளை கொண்டு நாங்கள் பால் விற்று எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள பசுமை நிறைந்த, இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியே பச்சைமலை ஆகும். இங்கு துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வண்ணாடு, கோம்பை ஊராட்சியும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த தென்புறநாடு ஊராட்சியும் என மொத்தம் 3 ஊராட்சிகள் உள்ளன. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும் இந்த மலைசூழ் பகுதியில் பழங்குடியின மக்களே அதிகளவில் வசிக்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்கு, முந்திரி, நெல், பலா இவற்றின் மூலம் வருகின்ற வருமானமே இவர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி பொருளாதாரத்தைப் பெருக்குகின்ற வகையில், ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இங்குள்ள மக்களுக்கு கறவைப் பசுக்கள் வழங்குதல், உழவுக்கு காளை மாடுகள் வழங்குதல், முந்திரியினை பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்றிட ஏற்பாடு செய்தல், தேனீ வளர்ப்பினை ஊக்குவித்து தேன் உற்பத்தியின் மூலம் தனி அடையாளத்தைக் கொண்ட தேனை விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் 10 ஆயிரம் தேனீப் பெட்டிகள் வழங்குதல்,

    மரவள்ளிக் கிழங்கினை நல்ல முறையில் சந்தைப் படுத்துதல், மிளகு பயிரிடுதல், மிளகாய், காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் உற்பத்தி செய்து தனி அடையாளத்துடன் சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

    இதன் முதற்கட்டமாக, பச்சை மலையில் வாழும் பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலுக்கு காணிக்கையாகவும், நேர்த்திக்கடனாகவும் வரப்பெற்ற மாடுகளை வழங்கி, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தித் திட்டத்தினை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கடந்த 27-ந்தேதி தொடங்கி வைத்தனர்.

    47 பயனாளிகளுக்கு பசுவும் கன்றும் என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுமாடும், 5 பயனாளிகளுக்கு தலா 2 காளை மாடுகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    பசுமாட்டினைப் பெற்ற டாப்செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இந்திரா தெரிக்கையில், எனது பெயர் இந்திரா, எனது கணவர் பெயர் குமார். நாங்கள் பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் வசித்து வருகிறோம்.

    நாங்கள் மலைவாழ் மக்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    என்னுடைய குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து எனது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றேன். தமிழக முதலமைச்சர் மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படையச் செய்திடும் வகையில் இத்திட்டத்தினால் எங்களுக்கு பசுமாடு கிடைத்துள்ளது.

    இந்த பசுகளை கொண்டு நாங்கள் பால் விற்று எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    பச்சமலையைச் சேர்ந்த முத்துலெட்சுமி கூறுகையில், எனது பெயர் முத்துலெட்சுமி, எனது கணவர் பெயர் சரவணன். நாங்கள் வேலைக்குச் செல்பவர்கள். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் வயலில் வேலைபார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். எங்கள் குடும்பம் மிகவும் ஏழைக்குடும்பம்.

    நாங்கள் மலைப்பகுதியில் வசிப்பதால் வெளியில் சென்று வேலைபார்க்கும் சூழ்நிலை இல்லை.

    விவசாயத்தையே நம்பி ஜீவனம் செய்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வழங்கிய பசு மாடுகள் எங்கள் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு மலைவாழ் மக்களின் சார்பாகவும் எனது குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    • பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் திட்டப் பணிகள்.
    • பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட வனத்துறை நடவடிக்கை.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக வனத்துறை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இணைப்புச் சாலைப் பணிகள் ரூபாய்.294.21 கோடி மதிப்பிலும், தெரு விளக்குகள் ரூபாய்.3.79 கோடி மதிப்பிலும், சோலார் மின் விளக்குகள் ரூபாய்.16.99 கோடி மதிப்பிலும், குடிநீர் திட்டப் பணிகள் ரூபாய் 79.69 கோடி மதிப்பிலும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதல் திட்டங்களுக்காக ரூபாய்.93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.முதலமைச்சர் ஆணையின்படி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட பல்வேறு பணிகள் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

    நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கவும், பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க முதல்கட்டமாக 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூபாய்.535.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தி, ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே பாஜக உழைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். #MadhyaPradesh #RahulGandhi #BJP
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பான பிரச்சாரங்களையும், தேர்தல் வேலைகளையும் காங்கிரஸ் மற்றும் பாஜக துவங்கிவிட்டன.

    இன்று ஆதிவாசி எக்தா பரிஷத் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,  ஆதிவாசிகளுக்கான சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும், தான் 2004-ம் ஆண்டு முதல் அரசியலில் இருப்பதாகவும், எப்போதாவது ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என பொய் வாக்குறுதி அளித்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



    2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை மூலம் கருப்பு பணங்கள் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதாகவும், யாரும் கைதும் செய்யப்படவில்லை யாரும் 15 லட்சம் பணமும் பெறவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், நீரவ் மோடி நமது பணமான 35 ஆயிரம் கோடி ரூபாயை திருடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும், விஜய் மல்லையாவோ 10 ஆயிரம் கோடியை திருடிவிட்டு நிதிமந்திரியிடம் சொல்லிவிட்டே வெளிநாடு சென்று ஒளிந்துகொண்டதாகவும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மேலும், மத்திய பாஜக அரசு, பணக்காரர்களுக்காக மட்டுமே பணியாற்றுவதாகவும், அப்படியே இருந்தாலும் கூட, ஏழைகளுக்கும், பழங்குடியின மக்களுக்காகவும் சற்று உழைக்குமாறும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #MadhyaPradesh #RahulGandhi #BJP
    கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
    கீழ்பென்னாத்தூர்:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட்ட காட்டுமலையனூர் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உயர் நிலைப் பள்ளி திறப்புவிழா காட்டுமலையனூரில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வனரோஜா எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி, கலசபாக்கம் பன்னீர்செல்வம், செய்யாறு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    2017-18ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தபட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. எதிர்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

    அதன்படி, கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வைத்த கோரிக்கையான கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை, தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.
    ×