என் மலர்
நீங்கள் தேடியது "கைப்பாவைகள்"
- பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது
- தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் அக்கட்சி ஆளாத மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், தொந்தரவு அளிக்கவும் ஆளுநர்களை "கைப்பாவைகளாக" பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கார்கே, பிரதமரின் அலுவலகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் ஆளுநர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும், குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரைகளை வாசிக்க வேண்டாம் என்று அவர்களைத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
"இது கர்நாடகாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது," என்று அவர் கூறினார். தொடர்ந்து கர்நாடக அரசுக்கும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்ட கார்கே, ஆளுநர்கள் வேண்டுமென்றே மசோதாக்களைத் தாமதப்படுத்துவதாகவும், திருப்பி அனுப்புவதாகவும், மேலும் ஆட்சி நிர்வாகத்தை முடக்குவதற்காக ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாகவும் கூறினார்.
"தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த அரசு நாட்டை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது," என்று அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மாற்றம் குறித்து பேசிய கார்கே, மக்களின் நலன் சார்ந்த சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறினார்.
"எந்தவொரு கட்சியும் எப்போதும் ஆட்சியில் இருப்பதில்லை, ஆனால் நாடு நிலையானது," என்று கூறிய அவர், பாஜக அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் விட ஆர்எஸ்எஸ் மற்றும் தனது கட்சிக்கே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.






