என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    UGC ஒழுங்குமுறை விதிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை
    X

    UGC ஒழுங்குமுறை விதிகளுக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை

    • பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை.
    • சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு வகுத்து செயல்படுத்தியுள்ள 2026-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு ( உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

    பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையில் பாகுபாடுகள் நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா சாதி அடிப்படையிலான சீண்டல்களின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்தும், 2012-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு வகுத்த விதிகளின் போதாமை குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய வினாக்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டு அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

    இந்த விதிகளின்படி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சாதியப் பாகுபாடுகள் குறித்த புகார்களை விசாரிக்க சமத்துவக் குழுக்கள் அமைக்கப்படுவதும், அந்தக் குழுக்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டியதும் கட்டாயம் ஆகும். இது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சாதிய பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பதற்கான நடைமுறை தானே தவிர வேறு எந்த சமூகங்களுக்கும் எதிரான செயல் அல்ல.

    ஒரு வகையில் பார்த்தால் இந்த விதிகள் வகுக்கப்படுவதற்கு முன்னோடி நான் தான். 2004--&09 ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்ற போது அங்கு பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கு சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக என்னிடம் புகார் தெரிவித்தனர். எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள விடுதிகள், உணவகங்கள், விளையாட்டுகள், விடைத்தாள் மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தங்களுக்கு பாகுபாடு இழைக்கப்படுவதாக என்னிடம் குற்றஞ்சாட்டினார்கள்.

    அதைத் தொடர்ந்து அப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுக்தேவ் தோரட் தலைமையில் குழு அமைத்து சாதிய அடிப்படையில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படியே தோரட் குழு அளித்த அறிக்கையை செயல்படுத்தவும் ஆணையிட்டேன்.

    உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுவது உண்மை. பல்கலைக்கழக மானியக்குழு நடைமுறைப் படுத்தியுள்ள விதிகளின் மூலம் பாகுபாடுகளை களைய முடியும் என்பதும் உண்மை. அந்த விதிகளுக்கு எதிராக சிலர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதற்காகவே விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை.

    அதுமட்டுமின்றி, 2012-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகள் போதுமானவையாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் தான் இப்போதைய விதிகள் வகுக்கப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது, இப்போதைய விதிகளை கிடப்பில் போட்டுவிட்டு, 2012-&ஆம் ஆண்டின் விதிகளை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்த வேண்டும் என்று கூறுவதும் நியாயமல்ல.

    பல்கலைக்கழக மானியக் குழு ( உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை. இந்த உண்மையை உச்ச நீதிமன்றத்தில் போதிய தரவுகளுடன் எடுத்துக் கூறி பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விரைந்து அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×