என் மலர்
இந்தியா

நாடு முழுவதும் ரெயில் கட்டணம் உயர்வு - கி.மீ.க்கு எவ்வளவு?
- டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.
500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.






