என் மலர்
இந்தியா

வந்தே பாரத் எனும் வர்க்கப் பிரிவினை.. 10% பேருக்காக பணயம் வைக்கப்படும் 90% மக்களின் நலன்கள்!
- ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது.
- ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம்.
இன்று (ஜூலை 1) முதல் ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றி கட்டண உயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீப காலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
இந்திய ரயில்வே கடந்த ஆறு ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை. சிறந்த உள் வசதிகளுடன் இவை பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் இது அனைவரும் எட்டும் சேவையாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்திய ரெயில்வேயில் பயணிக்கும் மொத்தப் பயணிகளில் சுமார் 90% பேர் இரண்டாம் வகுப்பு அல்லது குளிர்சாதன வசதியற்ற ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கின்றனர். அதாவது 146 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், வந்தே பாரத் சேவைகள் 90% இந்தியர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளன.
வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவும், கட்டணம் அதிகமாகவும் உள்ளன. எனவே இது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வந்தே பாரத் பயணத்தை எட்டாததாக ஆக்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது. இது, ரெயில்வேயின் கவனம் வசதி படைத்த ஏசி பயணிகள் மீது மட்டுமே உள்ளதைக் காட்டுகிறது.
2013-14 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023-24 ஆம் ஆண்டில் ஏசி அல்லாத பயணிகள் பிரிவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கும் மேல் குறைந்துள்ளது. வந்தே பாரத் போன்ற முழுவதும் ஏசி ரயில்களின் பெருக்கம், இந்த ஏழை, நடுத்தர பயணிகள் எண்ணிக்கைக் குறைவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலான வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளுடன் 1128 இருக்கைகளுடன் இயங்குகின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த ரெயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்புவதில்லை. அதே நேரத்தில், வழக்கமான ரயில்களில், குறிப்பாக இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு அதிக செலவில் உருவாக்கப்பட்ட ரெயில்கள் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரெயில்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது வளங்களை வீணடிப்பதாகக் கருதப்படுகிறது. இதனோடு தற்போதைய ரெயில் கட்டண உயர்வை பொருத்திப்பார்க்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுவது, சரக்கு போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த ரெயில்வே அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உயர்வருவாய் கொண்ட பயணிகளுக்கு விமானப் பயணங்கள் ஒரு மாற்றாக இருக்கும் நிலையில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு நீண்ட தூரப் பயணங்களுக்கு ரெயில்வேயைத் தவிர வேறு வழியில்லை.
ரெயில்வே தனது சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது பரந்த மக்கள் தொகையின் தேவைகளை புறக்கணித்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சேவை செய்வதாக இருக்கக் கூடாது.
புதிய ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள ரெயில்களின் கொள்ளளவை அதிகரிப்பதும், குறிப்பாக ஏசி அல்லாத பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதும் மிக அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.






