தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இல்லை - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதிலும், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை தீநுண்மியின் உட்பிரிவுகளான ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.

இருந்தபோதிலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சாா்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறாா்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com