என் மலர்
உலகம்

இந்தியாவுக்கு எதிராக கோஷம்.. வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை - அலுவலகங்களுக்கு தீ வைப்பு
- தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கினர்.
- டாக்கா மற்றும் முக்கிய நகரங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹாடியின் மரணச் செய்தி பரவியதும், தலைநகர் டாக்கா உட்பட வங்கதேசத்தின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கினர்.
நேற்று நள்ளிரவு டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் திரண்டு அவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star) ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளே சிக்கிய நிலையில் சுமார் 4 மணிநேர போராட்டத்தின் பின் தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.
இதேபோல் சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தியாவுக்கு எதிராகவும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பூர்வீக இல்லதிற்கும் தீவைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் அவாமி லீக் கட்சி அலுவலகங்களும் சூறையாடப்பட்டன.
வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஹாடியின் மரணத்திற்காக இன்று (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய துக்க தினத்தை அவர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே டாக்கா மற்றும் முக்கிய நகரங்களில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியத் தூதரகங்கள் மற்றும் விசா மையங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் பதற்றம் குறையாமல் உள்ளது.






