search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Embassy"

    • இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
    • இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் 3 பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
    • மத்திய கார்டூமில் உள்ள ஒரு மார்க்கெட் அருகே விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

    சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சண்டை தொடர்ந்தபடி இருந்தது.

    சண்டையை நிறுத்தி விட்டு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.

    இதற்கிடையே இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் ராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து உள்ளது. தலைநகர் கார்டூமில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது அந்த நகரத்தை உலுக்கியது. குண்டு வீச்சு சத்தங்கள் தொடர்ந்து கேட்டதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். மத்திய கார்டூமில் உள்ள ஒரு மார்க்கெட் அருகே விமான தாக்குதல் நடத்தப்பட்டது.

    பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இரு தரப்பினரும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஏற்பாடு செய்தன.

    இது தொடர்பாக சவுதி அரேபியா தூதர் ஒருவர் கூறும்போது, பேச்சு வார்த்தை எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இரு தரப்பும் தங்களை போரில் வெல்லும் திறன் கொண்டவர்கள் என்று கருதுகிறார்கள். போரில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறார்கள் என்றார்.

    • சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
    • இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    கார்ட்டூம்:

    சூடான் நாட்டில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

    ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த பணியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 16 விமானங்கள் மற்றும் 5 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    மீட்கப்படும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று இந்திய விமானப் படை விமானம் மூலம் 47 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

    கடந்த 9 நாட்களில் சூடானில் இருந்து வெற்றிகரமாக 3,862 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

    • ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவமும், துணை ராணுவமும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு என தாக்குதல் நடப்பதால் சூடான் மக்கள் தவித்து வருகிறார்கள். 3 வாரங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகிறார்கள்.

    இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சூடானில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா.சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள், கப்பல், விமானங்களை அனுப்பி தங்களது குடிமக்களை மீட்டு வருகின்றன.

    போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் தொடர்ந்து சண்டை நடந்தது. இதற்கிடையே பேச்சு வார்த்தைக்கு ராணுவ தளபதியும், துணை ராணுவ தளபதியும் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் சூடானில் மேலும் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதம் வழங்கி உள்ளனர்.

    அதன்படி மே 4-ந்தேதி (நாளை) முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இதற்காக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் இரு தரப்பினரும் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர்.

    அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதிகள் விவரங்கள், தேதி, இடம் ஆகியவற்றை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    • ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
    • விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்கா நாடான சூடானில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்குள்ள ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அங்கு சண்டை ஓய்ந்தபாடில்லை.

    தலைநகர் கார்ட்டூம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வருவதாகவும் , குண்டு மழை பொழிந்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தொடர் சண்டை நடந்து வருவதால் பொதுமக்கள் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    இந்த போரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இந்த சண்டைக்கு இதுவரை 413 பேர் இறந்து விட்டதாகவும், 3,551 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உலக சுகாதார மைய செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரீஸ் தெரிவித்து உள்ளார். மேலும் இதில் ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் 9 பேர் பலியாகி விட்டனர். 50 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் காயம் அடைந்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். தொடர் போரால் சாவு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப் படுகிறது.

    சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரால் பொது மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர். சூடானில் தமிழர்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சவூதி அரேபியாவில் உள்ள செட்டாநகர் விமான நிலையத்தில் இந்திய விமான படையை சேர்ந்த 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்திய கப்பல் படையை சேர்ந்த ஐ.என்.எஸ். சுமேகா என்ற போர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சூடான் தனது வான் வெளியை மூடி உள்ளதால் உலக நாடுகள் தங்கள் நாட்டினரை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. விமானங்கள் சூடானுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் அவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆலோசித்து வருகிறது.

    • வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது.
    • இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    கார்டூம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டு உள்ளது.

    சாலைகளில் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சு காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதலில் அப்பாவி மக்கள் உள்பட 413 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சூடானில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்து உள்ளது.

    இதனால் அங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே சூடானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்டு கொண்டு வர, ராணுவ துடுப்புகளை அனுப்ப அதிபர் ஜோபைடன் உத்தர விட்டார்.

    அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றனர்.

    தலைநகர் கார்டூமில் இருந்து விமானம் மூலம் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ராணுவம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றது.

    சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் மீட்கப்பட்டனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

    அதேபோல் அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கார்டூமிலில் இருந்து தூதரக ஊழியர்களை விமானம் மூலம் வெளியேற்றும் அமரிக்க ராணுவம் சூடான் வான்வெளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியது என்றனர்.

    இதற்கிடையே சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் பணி நிறைவடைந்து உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது உத்தரவின் பேரில் சூடானில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றும் பணியை ராணுவம் மேற் கொண்டது.

    அப்பணியை ராணுவம் வெற்றிகரமாக முடித்து விட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்பணிக்கு உதவிய ஜிபூட்டி, எத்தியோப்பியா, சவூதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    சூடானில் நடந்த இந்த துயரமான வன்முறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலி கொண்டு உள்ளது. இது மனசாட்சியற்றது. இச்சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    சூடானில் உள்ள அமெரிக்கர்களை ஒருங்கிணைந்து வெளியேற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.

    சூடானில் முக்கிய துறைமுகமாக போர்ட் சூடானில் இருந்து கப்பல் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், 91 வெளிநாட்டினர் என சுமார் 150 பேரை ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதில் சவூதி தூதரக அதிகாரிகள் விமான ஊழியர்கள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, கனடா, வங்காளதேசம் பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புர்கினா பாசோ ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

    அவர்கள் சவூதி அரேபியா ராணுவ அதிகாரிகளை பூங்கொத்து சாக்லேட் கொடுத்து வரவேற்றனர்.

    சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெங்சங்கர் சவூதி அரேபிய மந்திரியுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூடானில் ராணுவத்தினர் இடையேயான மோதலில் பொது மக்கள் பலியானார்கள்.
    • சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் நாட்டின் அதிகாரத்தை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது.

    துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்துல் பதா அல்-பர்ஹான் இடையே சுமூக முடிவு ஏற்படவில்லை.

    இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம், துணை ராணுவ படைகள் இடையே மோதல் வெடித்தது. வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது. சூடானில் ராணுவத்தினர் இடையேயான மோதலில் பொது மக்கள் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போது சூடானில் ராணுவ படைகள் இடையேயான தொடர் மோதலில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்ந்து உள்ளது. 2,600 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் உள்நாட்டு சண்டையால் சூடானில் 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சூடானில் உள்நாட்டு சண்டை தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த 200 பேர் சிக்கி உள்ளனர்.

    மீட்பு பணிகள் குறித்து தூதரக அதிகாரிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது.

    மத்திய அரசும், சூடான் தூதரக அதிகாரிகளும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுடன் மீட்பு பணிகள் பற்றி தூதரக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது.

    இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் ஹர்டோமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனால் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்தது. நாடு முழுவதும் பெரும் கலவரம் பரவியுள்ளது. இந்த மோதலில் இந்தியர் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் துணை ராணுவ படை தளங்களை குறி வைத்து ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அந்த படை தளங்கள் மீது குண்டு வீசப்பட்டன.

    ஹர்டோமில் உள்ள நைல் ஆற்றின் குறுக்கே துணை ராணுவத்தின் ஆர்.எஸ்.எப். தளம் மீது பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

    அதே போல் கபூரி, ஷார்க் எல்-நில மாட்டங்களில் துணை ராணுவ தளங்கள் தாக்கப்பட்டன.

    இதனால் சூடானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் ராணுவத்தின் கை ஓங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றுக்காக மனிதாபிமான அடிப்படையில் ஒரு மணி நேரம் சண்டை நிறுத்தத்துக்கு ராணுவமும், துணை ராணுவமும் ஒப்புதல் அளித்து உள்ளது.

    • ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர்.
    • சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஹர்டோம்:

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

    தால் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆல்பெர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் உயிரிழந்துள்ளார்.

    இதையடுத்து சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
    • போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    ஹர்டோம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

    இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அதே போல் ஆட்சியின் துணை தலைவராக துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.

    இதற்கிடையே துணை ராணுவ படை பிரிவான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

    துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படை (ஆர்.எஸ்.எப்.) தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தலைநகர் ஹர்டோமில் பதற்றம் நீடித்து வருகிறது.

    போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இது தொடர்பாக சவுதி அரேபியா கூறும்போது, ஏர்பஸ் ஏ330 விமானம் ரியாத்துக்கு புறப்படுவதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சேதம் அடந்தது. அனைத்து பயணிகள், விமான ஊழியர்களும் சூடானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருந்து மறு தகவலுக்கு காத்திருக்க கேட்டுக கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    • சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் வெடித்தது.
    • இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    கார்டோம்:

    சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

    துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடானின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் தொடர்கின்றன. எனவே சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

    • ரஷியா, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என, அமெரிக்கா சந்தேகம்
    • உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுரை

    வாஷிங்டன்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைன் இந்த வாரம் ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷியா குற்றம் சாட்டி இருந்தது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, இந்த போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அது போன்ற தாக்குதல்களை நடத்தினால் அது ரஷியாவின் மிக கடுமையான தவறாக கருதப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரம், உக்ரைனில் மீதம் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு உக்ரைனில் இருந்து வெளியேற கிடைக்கும் வழிகளை இந்தியர்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த 19ந் தேதி இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இதனால் ஏராளமான இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டனர் என்றும் இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    ×