search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் 56 பேர் பலி
    X

    சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் 56 பேர் பலி

    • ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
    • போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    ஹர்டோம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

    இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அதே போல் ஆட்சியின் துணை தலைவராக துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.

    இதற்கிடையே துணை ராணுவ படை பிரிவான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

    துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படை (ஆர்.எஸ்.எப்.) தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தலைநகர் ஹர்டோமில் பதற்றம் நீடித்து வருகிறது.

    போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இது தொடர்பாக சவுதி அரேபியா கூறும்போது, ஏர்பஸ் ஏ330 விமானம் ரியாத்துக்கு புறப்படுவதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சேதம் அடந்தது. அனைத்து பயணிகள், விமான ஊழியர்களும் சூடானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருந்து மறு தகவலுக்கு காத்திருக்க கேட்டுக கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×