என் மலர்
உலகம்

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகை இடுவோம் என காலிஸ்தான் அமைப்பு பகிரங்க அறிவிப்பு
- இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் SFJ குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த "Sikhs for Justice" (SFJ) என்ற காலிஸ்தான் அமைப்பு, கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை செப்டம்பர் 18 அன்று முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 18 காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, 12 மணி நேரத்திற்கு இந்திய தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் SFJ குற்றம் சாட்டியுள்ளது.
2023 இல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையே சில வாரங்கள் முன்பு கனடா அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






