என் மலர்
நீங்கள் தேடியது "Karur MP Jothimani"
- எளிமையான தோற்றத்தை தனது அடையாளமாக கொண்ட ஜோதிமணி எந்தவொரு பிரச்சினைக்கும் இறங்கி வந்து குரல் கொடுக்கக்கூடியவர்.
- அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மோதல், கலெக்டருடன் மோதல் என்று சில நாட்கள் பரபரப்பாக ஜோதிமணி பேசப்பட்டார்.
கரூர்:
கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை தாங்கி வந்து தற்போது எம்.பி.யாகி உள்ளார்.
எளிமையான தோற்றத்தை தனது அடையாளமாக கொண்ட அவர் எந்தவொரு பிரச்சினைக்கும் இறங்கி வந்து குரல் கொடுக்கக்கூடியவர். ராகுல்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக அடையாளம் காணப்படும் அவர் உள்ளூர் அரசியலில் ஆரம்பத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் அனைவரையும் அதிர வைத்தது. அதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்கும் பாத்தியப்பட்டு அதனை மேலிடத்தில் கூறி கரூர் தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சீட் வாங்கி தி.மு.க. கூட்டணியின் பேராதரவுடன் வெற்றியும் பெற்றார்.
தொடக்கத்தில் கரூரையை சுற்றி சுற்றி வந்த ஜோதிமணி எம்.பி. தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் குறை கேட்பது, அரசு நலத்திட்ட பணிகளை பார்வையிடுவது, வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு என்றிருந்தார்.
இடையே அவரைப்பற்றிய பேச்சு குறைந்திருந்த நிலையில் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், கலெக்டருடன் மோதல் என்று சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார்.
தொடக்கத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வந்த ஜோதிமணி எம்.பி. அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தார். கலெக்டரின் நடவடிக்கைகளை கண்டித்து அவரது அலுவலகத்தில் தனிநபராக பாய் விரித்து படுத்து உறங்கினார். இதனால் அவர் சார்ந்திருந்த காங்கிரசார் முதல் தி.மு.க.வினர் வரை ஜோதிமணி எம்.பி.யை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் வகையில் அவரது செயல்பாடுகள் சமீப காலமாக இருந்து வருகிறது.
அதனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் பயணித்தார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அவரது நடைபயணம் தொடர்கிறது.
வாக்களித்து வெற்றி பெற செய்த உள்ளூர் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமலும், கண்டுகொள்ளாமலும் செயல்படுவதாக தொகுதி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் வெளிப்பாடு கரூர் எம்.பி.யை காணவில்லை என்று கரூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் சுவர்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் அந்த போஸ்டரில் பயோடேட்டா மாடலில், பெயர்: ஜோதிமணி, பிடித்த இடம்: போலீஸ் வேன், பார்லிமெண்ட் கேண்டீன், வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது, பிடித்த பொழுதுபோக்கு: கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளாண் பிரியாணி சமைப்பது. பிடித்தவர்கள்: அண்டோனியா மைனோ, ராவுல் வின்சி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, பிடிக்காத வார்த்தைகள் தொகுதி நலன், மக்கள் வாக்குறுதி, ராமர்கோவில், பிடித்த நாடு: இத்தாலி, மறந்தது: தான் கரூர் தொகுதி எம்.பி. என்பதை..., காணாமல் போன தினம்: 23 மே (கரூர் எம்.பி.யாக பதவியேற்ற பின்பு) மேலும் பாராளுமன்ற கேண்டீனில் சலுகை விலை பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதை தவிர, இவரால் தொகுதிக்கு எந்தவித பயனும் இல்லை எனவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் நடிகர் தனுஷ் நடித்த கர்ணம் திரைப்படத்தில் கிடக்குழி மாரியம்மாள் பாடிய கண்டா வரச்சொல்லுங்க... அவர கையோடு கூட்டி வாருங்க... என்ற பாடல் வரியும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
இது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






