என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026-ல் அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும்: ராஜேந்திர பாலாஜி
    X

    2026-ல் அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும்: ராஜேந்திர பாலாஜி

    • அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன?.
    • வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

    பெத்தநாயக்கன்பாளையம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிபேட்டையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜ ராஜ சோழன் தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல் தூங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தான் எழுந்துள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற நாடகத்தை தொடங்கி உள்ளார். இதில் மக்கள் ஏமாற கூடாது. மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப நாம் போராட வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன?. அவர்கள் வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தனர். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். இதற்காக தான் மக்களும் காத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும், மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    2026-ல் அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும். அதிமுக- பாஜக கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதில் கல்லெறியாதீர்கள். தெளிந்த நீரோடையில் கல்லெறிபவர்கள் காணாமல் போவார்கள். கூட்டணி அரசு என அமித்ஷா கூறவில்லை. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி- அமித்ஷா பேசிவிட்டார்கள். வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வர்த்தக அணி துணை செயலாளர் வரதராஜன், விவசாய அணி ஜெயசாமி, ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித்குமார், வி.பி.சேகர், மோகன், முருகேசன், மாவட்ட பாசறை தலைவர் வாசுதேவன், இணை செயலாளர் வீரபாண்டி பாலாஜி, தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×