உள்ளாட்சித் தேர்தலில் ‘We the Leaders’ அமைப்பு களமிறங்கும்: அண்ணாமலை அறிவிப்பு!

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், நேர்மையான மற்றும் திறமையான புதிய தலைவர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  Annamalai
Published on: 
Summary

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் போட்டியிடும் என அதன் நிறுவனர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் 15,000 மரக்கன்றுகள் நடும் மாபெரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி நடைபெற்றது. டாக்டர் எம்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவ்வமைப்பின் நிறுவனர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கினால்தான் ஆரோக்கியமான அரசியலைப் பேச முடியும் என்று தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், தான் இதற்கு முன்பு பிரசாரம் செய்து வெற்றிபெற செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கட்சியில் நீடிக்காத நிலையைக் சுட்டிக்காட்டினார். இது போன்ற சுயநல அரசியலை உடைத்தெறிய வேண்டும் என்றும், இதுபோன்ற மோசமான அரசியல் முறைகளுக்குள் நாம் செல்லக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் எழாத வண்ணம் தடுத்து, தற்கால தலைவர்களாக உருவாகுபவர்கள் தங்களது கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களைச் சுத்தப்படுத்துவதிலும், மரங்களை நட்டு அவற்றைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தின் அடிப்படையில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு மக்களுக்கு ஒரு உண்மையான மாற்றாகவும், "இதுபோன்றதொரு அரசியல் இயக்கம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் நாம் காத்திருந்தோம்" என்று மக்கள் எண்ணும் வகையிலும் செயல்படும் என்றார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் களப்பணியாற்றும் தலைவர்களை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிடும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கருநாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், ராஜ்குமார், வேட்டைத் திடல் ரமேஷ், பிரபு மற்றும் வழக்கறிஞர்கள் ஐயப்பன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com