

கரப்பான்பூச்சி கட்சிக்கு பாஜகவே விளம்பரம் தேடி தருவதாகவும், ஜனநாயகத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பினால் தேசத்துரோகி என தொடர்ந்து முத்திரை குத்துவதும் சலிப்படைய செய்வதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக்கூறினார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில், அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியது முற்றிலும் சரியான கருத்தே. அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம்.
அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது.
ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன்.
இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை.
ஒருவகையில், இந்தத் தாக்குதல்களை நான் ரசிக்கவும் செய்தேன் என்பதே உண்மை. ஏனெனில், நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், ‘துரந்தர்’ படத்தில் வருவதைப் போல தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்ட முத்திரையை மிக விரைவாக அகற்ற இவை உதவும் என்றே நினைத்தேன்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சி அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன்.
ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்?
நிச்சயமாக ஆம் என்பேன்!
எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?
டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?
டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.
அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!
அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?இது என்ன மாதிரியான விளையாட்டு?
எட்டு பிணை உத்தரவாதங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? பிணை உத்தரவாதம் அளிக்க வந்த நபரிடம் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் குறுக்கு விசாரணை நடத்தினார்?
நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் பயன்படுத்திய பெல்லட் துப்பாக்கிகள் குறித்தோ, போராட்டக்காரர்களுக்கு எதிராக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) மீறிய டெல்லி காவல்துறையினரின் பிற நடவடிக்கைகள் குறித்தோ ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
கடந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் காலங்களில், டெல்லியில் பாஜக தொண்டர்கள் யாரும் பிணை நிபந்தனைகளை மீறியதில்லையா?
அப்போது தடுப்புகளைத் தாண்டிச் சென்றதும், காவல்துறையின் உத்தரவுகளை மீறியதும் இதே டெல்லி காவல்துறையின் கண்காணிப்பில்தானே நடந்தன? அப்போது அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இப்போது நடப்பதைப் போலவா?
நிச்சயமாக இல்லை என்பதே நிஜம்..!
தற்போது, இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தை எட்டிய பிறகு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த CJP நிர்வாகிகள் சிறப்பு நிர்வாக நீதிபதியால் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில் தசரா கொண்டாட்டங்களின்போது கரப்பான் பூச்சியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதையும் பார்த்தேன்.
இதன் மூலம் அவர்களுக்கு தேசிய அளவில் இலவச விளம்பரம் பெற்றுத் தருவது யார் என்று விசாரித்த போது, ஆச்சர்யத்துக்கு இடமில்லாமல் இதற்குத் தலைமை தாங்கியது பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோயல் என்பது தெரிய வந்தது.
பாஜக உண்மையில் CJP அமைப்பை எதிர்க்கிறதா? அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கிறதா?
CJP-ஐ ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பாஜக விரும்புகிறதா?
இதே வேகத்தில் சென்றால், CJP அமைப்பு பணம் கொடுத்தாலும் இதைவிடச் சிறந்த விளம்பரக் குழுவைப் பெற்றிருக்க முடியாது!
நேற்று, SIR நடவடிக்கைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் குறித்தும் இதேபோன்ற கேள்விகளை எழுப்பினேன். SIR செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உண்மையில் என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்டேன்.
மேலும், நமது ஜனநாயக அமைப்புகளில் சில தனிநபர்கள் தவறு செய்திருக்கக்கூடும் என்பதற்காக, எதிர்க்கட்சிகளும் CJP அமைப்பும் நமது ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களின் மீதும் ஒட்டுமொத்தமாகக் களங்கம் சுமத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.
இறுதியாக, எதற்கெடுத்தாலும் ‘தேசவிரோதி’ என்று முத்திரை குத்தும் போக்கு இதோடு போதும்!
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA), மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து விசாரணை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை.
வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், வெளிநாட்டு எதிரிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் இந்தியக் குடிமக்களைக் கண்காணிப்பதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையையும், வெளிநாட்டு சக்திகளால் நிதியளிக்கப்படுவதாகவும் தேசவிரோதச் செயலாகவும் சித்தரிப்பதைப் பார்க்கிறபோது, உண்மையிலேயே சலிப்பையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது.
டெல்லியில் மத்திய அரசு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தன்னைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்வதற்காக எப்போதும் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வலுவாக ஏற்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.