

வி தி லீடர்ஸ் மற்றும் தாரகை பெண்கள் அமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
'வி தி லீடர்ஸ்' மற்றும் தாரகை பெண்கள் அமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பெண்கள் வளர்ச்சி மாநாட்டில், அமைப்பின் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரளாகக் கலந்துகொண்ட இம்மாநாடு, அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் மேம்பாட்டிற்காக 'வி தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவிக் காசோலைகளை அண்ணாமலை வழங்கி கவுரவித்தார். மேலும், பெண்களின் சமூகப் பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி மற்றும் அவர்களின் பொருளாதார சுதந்திரம் குறித்து அவர் சிறப்பு உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய அவர், 'வி தி லீடர்ஸ்' அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டில் உண்மையான மாற்று அரசியல் கொண்டுவரப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதேசமயம், இதுவொரு முழுமையான அரசியல் மாநாடு அல்ல என்றும், முழுக்க முழுக்க பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சமூக நல மாநாடு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்றும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை உயரவில்லை என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், பெண்களின் முன்னேற்றம் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.