search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chirag Paswan"

    • லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.
    • அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி நடந்து வருகிறது. இதில் லோக் ஜனசக்தி கட்சி தலைவரான சிராக் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிராக் பஸ்வான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அக்கட்சியின் தலைவராக இருப்பார்.

    மேலும் அரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது பேசிய சிராக் பஸ்வான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அது அரசாங்கத்திடம் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதிசெய்யும். ஆனாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் பொதுவில் வருவதை விரும்பவில்லை. அது ஒரு விரிசலை உருவாக்கலாம் என தெரிவித்தார்.

    பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது லோக் ஜனசக்தி கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    • லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.

    பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு.
    • பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவை பார்க்கும் வரை கருத்து கூற இயலாது.

    பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. பீகார் மாநிலம் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சியை பிடித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உடன்பாடு இல்லை.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வலியுறுத்தும்போதெல்லாம், மத்திய அரசு அதை செய்ய வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வான் சாதிவாதி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்புக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், அதன் புள்ளி விவரங்களை பொது வெளியில் தெரிவித்தால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வழிவகுக்கும்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் (UCC) ஆகியவை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை ஏதும் நடத்தவில்லை.

    பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னதாக அதுகுறித்து ஒரு முடிவு எடுக்க முடியாது. அதேவேளையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) நாடு முழுவதும் ஒரே தேர்தல், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முழுமையாக ஆதரிக்கும்.

    இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியங்களின் மொழி, கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட எல்லாம் மாறுபட்டவை. எல்லோரையும் ஒரே புள்ளியில் எப்படி கொண்டு வர முடியும் என்பதை குறித்து வியக்கிறேன்.

    இது இந்து- முஸ்லிம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்துக்களில் பாரம்பரியம், திருமணம் உள்ளிட்டவை நாடுகளில் மாறுபட்டவையாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் இதில் இருந்து விலக்கு பெறுவார்கள் என நினைக்கிறேன். அதனால் அவர்களை நீங்கள் எப்படி ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும்?. ஆகவே வரைவு வரும்வரை, இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது இந்து- முஸ்லிம் பிரிவினை பற்றியது அல்ல. இது அனைவரையும் ஒன்றிணைப்பது பற்றியது என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    • பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாஜக அரசின் உந்த உத்தரவிற்கு பாஜக கூட்டணியில் உள்ள 3 முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன் என்று உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவிற்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    அதே போல், உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும் என்று நிதிஷ்குமார் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

    பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் ராமஷிஸ் ராய் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச பாஜக அரசின் உத்தரவிற்கு பாஜக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிராக் பஸ்வான் 2011 ஆம் ஆண்டு மைலே நா மைலே ஹம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
    • அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா நடித்திருந்தார்.

    பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தும் சாந்தி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    13 வருடங்களுக்கு முன்பு ஒரே திரைப்படத்தில் கதாநாயகன் நாயகியாக நடித்த இருவர் தற்போது எம்.பி.யாக பதிவேற்று பாராளுமன்றத்தில் சந்தித்து கொண்டுள்ளனர்.

    பீகாரின் மூத்த அரசியல்வாதியான ராம் விலாஸ் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வான் 2011 ஆம் ஆண்டு மைலே நா மைலே ஹம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா நடித்திருந்தார்.

    அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் சினிமாத்துறையில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக சிராக் பஸ்வான் மாறினார்.

    தற்போது ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்,பி.யான சிராக் பஸ்வான், உணவு பதப்படுத்தும் தொழில்துறையின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

    இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற கங்கனா எம்.பி.யாக பதவியேற்றுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
    • சாம்பவி சவுத்ரி தான் பீகார் சமஸ்திபூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி. ஆவார்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அப்போது, இந்தியாவின் இளம் வயது எம்பிக்களில் ஒருவரான சாம்பவி சவுத்ரி பதவியேற்று கொண்டார்.

    26 வயதான சாம்பவி சவுத்ரி சேலை அணிந்து வந்து எந்த பேப்பரையும் பார்த்து படிக்காமல் உறுதிமொழி எடுத்து கொண்டார்.

    சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி, கட்சியை சேர்ந்த சாம்பவி பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி. ஆவார்.

    • சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.
    • தோல்வி உறுதி என தெரிந்த போதிலும் இதுபோன்று தலித் தலைவர்களை வேட்பாளராக நிறுத்துகிறது என குற்றச்சாட்டு.

    மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணிக்கு விட்டுக்கொடுக்க பாஜக மறுக்கிறது. இதனால் சபாநாயகர் பதவியில் போட்டியிடப் போவதாக அறிவித்து வேடபாளரையும் அறிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கே. சுரேஷை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தோல்வி உறுதியாகும் போதெல்லாம் தலித் கார்டை வைத்து விளையாடுகிறது என சிராக் பஸ்வான் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    2002-ம் ஆண்டு நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என காங்கிரஸ் கூட்டணிக்கு தெரியும். அப்படி இருந்தும் தலித் தலைவரான சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்தியது.

    2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி ராம்நாத் கோவிந்தை நிறுத்தியது. அவருக்கு போதுமான அளவிலான எண்ணிக்கையில் ஆதரவு இருந்த போதிலும் தலித் சமுதாயத்தை சேர்ந்த மீரா குமாரை நிறுத்தியது.

    தற்போது மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில், தலித் தலைவரான கே.சுரேஷை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தலித் தலைவர்கள் வெறும் அடையாள வேட்பாளர்கள்தானா?.

    இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    தானும் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவன்தான் என கூறிக்கொண்டு மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த அரசு பணியாற்ற முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மந்திரி சபையில் இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முக்கியமான இலாகாக்களை கேட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாங்கள் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிராஜ் பஸ்வான் கூறுகையில் "நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கும், அவரது தலைமைக்கும் எங்களுடைய ஆதரவை நாங்கள் தெரிவித்தோம். எந்தவொரு நிபந்தனையின்றி அவரது தலைமையை ஏற்றுக் கொண்டோம். எந்த நிபந்தனையும் இருக்க முடியாது. இந்த வெற்றி பிரதமர் தலைமைக்கான வெற்றி.

    தேசிய ஜனநாயக கூட்டணியை அவருடன் இணைத்து கொண்டு சென்றதன் காரணமாக எங்கள் கூட்டணி இந்த வெற்றியை பெற்றுள்ளது" என்றார்.

    பீகார் மாநிலத்தில் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 12 இடங்களில் வெற்றி பெற்றது. ஜித்தன் ராம் மஞ்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

    • ராம் விலாஸ் பஸ்வான் கட்சியை பிரித்து பசுபதி பராஸ் தனியாக செயல்பட்டார்.
    • ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தற்போது பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா 17 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனால் மத்திய மந்திரியாக இருக்கும் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2019 மக்களவை தேர்தலின்போது பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக் தளம் பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. அவர் மத்திய மந்திரியாக இருந்தார். அவர் மறைவுக்குப்பின், அவரது சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை பிரித்து தனியாக செயல்பட்டார். அவருக்கு பா.ஜனதா மத்திய மந்திரி பதவியும் வழங்கியது.

    ஆனால், தற்போதைய தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் பஸ்வானை (லோக் ஜனசக்தி) சேர்த்துக் கொண்டது. இதனால் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்து தனது மந்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில் "நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. எங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக 6 தொகுதிகள்தான் தருவோம் என்கிறது பா.ஜனதா.
    • சிராக் பஸ்வானுக்கு 8 தொகுதிகளுடன், உ.பி.யில் 2 தொகுதிகள் கொடுக்க முன்வரும் இந்தியா கூட்டணி.

    பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் கட்சி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம் பிடித்திருந்தன. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியிருந்தது.

    இந்த முறையும் இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பிரிந்து பசுபதி பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

    2019-ல் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு இடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வாக் அதே ஆறு தொகுதிகளை கேட்கிறார். அதேவேளையில் பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக ஆறு தொகுதிகள் தருகிறோம். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு தனியாக ஆறு இடங்கள் தர முடியாது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணி அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து, கடந்த முறை லோக் ஜன சக்தி போட்டியிட்ட அதே ஆறு இடங்களை தருகிறோம். மேலும் கூடுதலாக இரண்டு தொகுதிகள் வழங்குகிறோம். அத்துடன் உத்தர பிரதேசத்தில் இரண்டு இடங்கள் தருகிறோம் எனத் தெரிவித்து, சிராக் பஸ்வானை இந்தியா கூட்டணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறது.

    பசுபதி பராஸ்க்கு பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. அரசில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும், சிராஜ் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளம் மற்றம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும், பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசவில்லை. அவர் ஏற்கனவே பிரதமர் மோடியை ராமர் என்றும், தன்னை ஹனுமான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    2020-ல் பா.ஜனதா உடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிராக் பஸ்வான் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.

    மேலும் சிராக் பஸ்வான்- பசுபதி பராஸ் இடையே ஹஜிபுர் தொகுதியை பெறுவதில் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆக மொத்தத்தில் பா.ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிராக் பஸ்வான் இந்தியா கூட்டணி வந்தால் அது சாதகமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    • சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.
    • தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் நிலைமையை நேரில் கண்டறிய பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறினார்கள்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த இடத்திலும் சென்று பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது.

    தமிழ்நாட்டில் நிறைய பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    எனவே சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர் என்று கேட்டுக் கொண்டேன் என்று கூறினார்.

    • பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
    • சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர்.

    எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 உயர் அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர். இவர்கள் தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர்.

    இந்த குழுவினர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் அங்குள்ள வட மாநில தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார்கள். இந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்தார்.

    பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை கேட்டறிந்தார்.

    அதன்பிறகு சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    அதன்பிறகு கிண்டி ராஜ்பவன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவையும் கவர்னரிடம் அளித்தார்.

    ×