என் மலர்
இந்தியா

பீகார் தேர்தல்: கூட்டணி பலத்தால் மாபெரும் வெற்றி பெறும் சிராக் பஸ்வான்..!
- ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
- ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது.
பீகாரில் சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 11ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாஜக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அதேபோல் மகாபந்தன் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதனால் இந்த தேர்தல் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், கட்சி 23 இடங்களில் முன்னிலை வகித்து, என்டிஏ கூட்டணிக்கு பக்கபலமாக இருந்துள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி கடந்த 2020 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற தற்போதைய தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
மொத்தத்தில், என்டிஏ கூட்டணி ஒரு வலுவான வெற்றியை நோக்கிய நிலையில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பெரிய அளவில் கை கொடுத்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், இந்த கூட்டணி பலத்தால் சிராக் பஸ்வான் மாபெறும் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






