என் மலர்tooltip icon

    இந்தியா

    அதென்ன நட்பான சண்டை: ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை கிண்டல் செய்த சிராக் பஸ்வான்
    X

    அதென்ன நட்பான சண்டை: ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை கிண்டல் செய்த சிராக் பஸ்வான்

    • ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்.
    • தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும்.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA)- இந்தியா கூட்டணிக்கும் (India Bloc) இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

    இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் முடிவடைந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஒரே தொகுதியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை நட்பான சண்டை என இந்தியா கூட்டணி அழைக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்சன சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான், நட்பான சண்டை என்பது கிடையாது என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை குறித்து அவர் கூறியதாவது:-

    ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது அவர்களுடைய தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும். அது எப்படி இன்னொரு தொகுதிகளில் பாதி்ப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள பிளவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.

    நான் அரசியலை நன்றாக புரிந்தவன். தொகுதி பங்கீடுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்தியா கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு கூட செய்ய முடியவில்லை. ஒரு தேர்தலில் பெரிய கூட்டணி பிளவு படும் விளிம்பில் இருப்பது போன்றதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்தியா கூட்டணியில் லாலு கட்சி (RJD) 143 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 20 தொகுதிகளிலும், சிபிஐ 6 தொகுதிகளில், சிபிஐ-எம் 4 தொகுதிகளிலும், விஐபி 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் 60 தொதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    Next Story
    ×