search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durai Vaiyapuri"

    • 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
    • பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.

    இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.

    நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.

    எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

    எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.

    கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×