search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaperunthakai"

    • கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
    • முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

    கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு.
    • உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையில் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநராக ஆர்.என்.வி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.

    ஆனால், அரசமைப்புச் சட்ட உறுப்பு 163(1)-ன்படி அமைச்சரவையின் ஆலோசனையோ, அறிவுரையோ இன்றி தன்னிச்சையாக ஆளுநர் செயல்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது. இதில் அவருக்குள்ள விருப்புரிமை மிகமிக குறைவானதே ஆகும். இந்நிலையில் தமிழக சட்டப்போவை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் முடக்கி வருகிறார். இது அப்பட்டமான தமிழக விரோத செயலாகும்.

    சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துக் கடந்த 11 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி நீடிக்கிறார் என்று சட்டப்பேரவை சபாநாயகர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் ஆளுநர், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு "உச்சநீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீர்ப்பு வழங்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்கின்றன. எனவே, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது" என்று ஆளுநர் பதில் கூறியிருந்தார். ஆளுநரின் இந்த செயல் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் கொந்தளிக்க செய்தது. அரசமைப்புச் சட்டப்படி ஓர் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆர்.என். ரவி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் போல நடந்து கொள்வதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டரீதியாக தடை எதும் இல்லாத நிலையில் தி.மு.க. மீது ஆளுநருக்கு உள்ள வன்மத்துடன் , வேண்டுமென்றே பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்து வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை மறுக்கும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.இதன்படி உறுப்பு 154, உட்பிரிவு 1-ஐ ஆளுநர் அப்பட்டமாக மீறுவதாக முறையிடப்பட்டது. முதல்வர் பரிந்துரைத்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருவது சட்டவிரோதம் என கூறப்பட்டது.

    இதனை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், "உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அவர் எப்படி கூற முடியும்? இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநருக்கு நாளை வரை அவகாசம் வழங்குகிறோம். இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆளுநருக்கு எதிராக கடுமையான கேள்விக் கணைகளை எழுப்பி எச்சரித்திருக்கிறது.

    இதற்குப் பிறகும் பொன்முடி அமைச்சராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை தூக்கி எறிகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

    எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.யின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என் ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். இதனை பா.ஜ.க. அரசு செயல்படுத்தவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடை பெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்த செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய் குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ''தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

    நான் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப் பெருந்தகைக்கு வழங்குகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்த நாட்டை காக்க முடியும் என்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். அழகிரியின் பணி பாராட்டுக்குரியது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்.பி.க்களை பெற்றுத்தந்தார்.


    காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கமாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் ஒருநாள் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திரு நாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணி சங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாநில சிறு பான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல் போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், முத்தழகன், டில்லி பாபு, மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் ஏழை மக்களுக்கு இரவு உணவுடன் 1000 பெண்களுக்கு பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
    • தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ரூ. 500 கோடிக்கு மேலான காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தோம்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் பிறந்த நாள் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முகப்பேர் மதன்பாலு வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணை தலைவர்கள் மோகனரங்கம், கணபதி, வி. விஜய், திலிப்குமார், கார்த்திகேயன், தமிழரசன், தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு. செல்வ பெருந்தகை, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ். வி. ரமணி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர்கள் பெனட் அந்தோணி, ஜோதி ராமலிங்கம், மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், மாநில செயலாளர் ரகுநாதன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட, சர்க்கிள் தலைவர்கள், வட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஏழை மக்களுக்கு இரவு உணவுடன் 1000 பெண்களுக்கு பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    விழாவில் சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை பேசுகையில், தலைவர் திருநாவுக்கரசு சிறந்த பண்பாளர். எல்லோரது மனதிலும் இடம் பிடிக்கும் பன்முகத் தன்மை கொண்டவர். அவர் 74 வயதிலும் ஒரு இளைஞரை போன்று செயல்படுகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய முகவரி. அவரைப் பற்றி நான் பேச வேண்டும் என்றால் எங்களுக்குள் எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் அதை பேசி உடனே புரிந்து கொண்டு செயல்படக்கூடிய தன்மை எங்கள் இருவருக்கும் அமைந்தது. இதை பார்த்து சில தலைவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்வதுண்டு. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது சொத்துப் பாதுகாப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி அதில் என்னை தலைவராக நியமித்து நீங்கள் தான் இதை செய்து முடிப்பீர்கள் என்று என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ரூ. 500 கோடிக்கு மேலான காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தோம். இது பற்றி ராகுல்காந்தி அறிந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சொத்துக்களை மீட்க டெல்லியில் ஒரு கமிட்டி அமைத்து அதை அந்தந்த மாநிலத்திற்கு பார்வையாளர்களை போட்டு சொத்துக்களை பராமரிக்கவும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க ஆணையிட்டார். அதற்கு வழி வகுத்தவர் திருநாவுக்கரசர். ஜெயலலிதாவை போன்ற பெரிய ஆளுமைகளை உருவாக்கி அவர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் இது வரலாற்று உண்மை. அவர் வெள்ளந்தி மனம் படைத்தவர். எல்லோரையும் நம்ப கூடியவர். முதலமைச்சராக வரக்கூடிய தகுதி வாய்ந்த தலைவர் அவர். கல்வி சார்ந்த அறிவு சார்ந்த நிறுவனங்களை தொடங்கும் போது அதில் காமராஜர் என்ற பெயரை உச்சரிக்காமல் எந்த நடிகரும் எந்த அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டில் பயணிக்க முடியாது என்றார். முடிவில் மிதுன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் செய்திருந்தார்.

    • சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
    • உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    கொரோனா வைரஸ் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சுமத்தும் வகையில் பேச முயன்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் செல்வ பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார். ஆனாலும் செல்வபெருந்தகை மீண்டும் சில வார்த்தைகள் பேச முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இவருக்கு இதே வாடிக்கையாகி போய்விட்டது. எங்களை குற்றம் சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா என்று ஆவேசத்துடன் கூறினார். உடனே அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின் சபை அமைதியானது.

    ×