என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?- முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
- இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது.
- உண்மையான மக்கள் பிரச்சனைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பா.ஜ.க.வினர் பதில் அளித்து வருகின்றனர். இதனால் இன்று காலை முதல் சமூக வலைத்தள பக்கங்களில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசை சாடி மு.க.ஸ்டாலின் பதிவிட்டதற்கு, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் என, உண்மையான மக்கள் பிரச்சனைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.






