என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம் காதல்"

    • ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர்.
    • பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முன்பு திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இருவரும் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள விநாயகர் கோவில் குளத்தின் ஓரம் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரவீன்குமார் ஒரு கட்டத்தில் அங்குள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட காதலியும், பிரவீன்குமாரை காப்பாற்றுவதற்காக சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்ற அபயக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குளத்தில் பார்த்துள்ளனர். அங்கு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது காதலி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரவீன்குமாரின் குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் காதலர்கள் குளத்தில் குதித்ததில் காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
    • தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்தனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு செல்போன் மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காதலன் குமரேசன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்தார்.

    தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார். அங்கு 3 பேரும் அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்தபடியே நடந்து சென்றனர்.

    காதலனின் நண்பர்களை கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த அனுசியா குழந்தையை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். காரில் காத்திருந்த காதலன் குமரேசனுடன் கைகோர்த்த அவர், சட்டென்று ஏறி வண்டியில் அமர்ந்து கொண்டார். உடனே அவரது நண்பர்களுடன் காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச் சென்றனர். தனது சகோதரி காரில் ஏறி தப்பி செல்வதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்து சென்றதோடு தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

    மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், விசாரணை செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

    இதனிடையே அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோகன்ராஜ் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களுக்கிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • வீட்டில் உள்ள அறையில் இருந்த போது திடீரென மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, விநாயகபுரம், 2-வது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மோகன் ராஜ் (வயது 24). ஏ.சி. மெக்கானிக்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர்களுக்கிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலி பேச மறுத்து உள்ளார். இதன் காரணமாக மோகன்ராஜ் மனவேதனை அடைந்தார். இரவு வீட்டில் உள்ள அறையில் இருந்த போது திடீரென மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவ குருநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மோகன் ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • விசாரணையில் சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுமியும் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் போன் நம்பரை பரிமாறி கொண்டுள்ளனர். முதலில் நண்பர்களாக பேசி வந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். வீட்டில் தெரிந்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இருவரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் இருவரையும் திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை திருப்பூருக்கு வரவழைத்துள்ளனர்.

    • திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
    • மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராத்தை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆதித்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறி இருவரும் பேசி வந்துள்ளனர். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்யா மாணவியை மிரட்டி என்னை காதலிக்காவிட்டால் 2 பேரும் எடுத்துக்கொாண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் பேசியும் கேட்காத ஆதித்யா தனது நண்பர்களுடன் 2 பைக்கில் மாணவியின் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அவரது வீட்டை விசாரித்துக் கொண்டிருந்தபோது மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்துவரும்படி கூறினர்.

    பெற்றோர் வந்ததும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அருண்பாண்டியின் குடும்பத்தினர் சம்மதித்ததால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார்.
    • கண் இமைக்கும் நேரத்தில் வாலிபர் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் வாசிமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவரும் மதுரை பேரையூரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் சந்துரு (வயது 23) என்பவரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இவர்கள் பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமானது.

    புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார். இந்த விபரம் புவனேஸ்வரி குடும்பத்துக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சந்துருவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த சந்துரு நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. உன்னை நேரடியாக பார்க்க உன் வீட்டுக்கே வருகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி நேற்று அவரது வீட்டுக்கு வந்த சந்துரு என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என கண்ணீர் வடிக்க கேட்டுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்ததால் இங்கிருந்து உடனடியாக சென்று விடு என அவர் கூறியுள்ளார். அதனை கேட்காமல் சந்துரு தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி உன் கண் முன்னால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார்.

    கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.

    இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது சாக்குப் போட்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×