search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Theft"

    • கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை

    போளூர்:

    திருவண்ணாமலை நகரில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35 வயது), ஆசாத் (36), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குதரத்பாஷா (43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்சர்உசேன் (26), நிஜாமுதீன் (37) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் போளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு எம்.காளிமுத்துவேல், அவர்களை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். போளூரில் வைத்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை ரூ.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதி 67 லட்சத்தை மீட்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.எஸ்.பி. அதிரடி உத்தரவு
    • செய்யாறில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

    செய்யாறு:

    செய்யாறு காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வங்கி கிளை மேலாளர்க ளுக்கும் மற்றும் ஏ.டி.எம். காவலாளி களுக்குமான விழிப்புணர்வு கூட்டம் செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் நேற்று மாலை நடந்தது.

    இன்ஸ்பெக்டர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செய்யாறு வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள வங்கி கிளை மேலாளர்கள் ஏடிஎம் காவலாளிகள் என 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. வெங்கடேசன் பேசுகையில்:-

    வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் கண்டிப்பாக செக்யூரிட்டி காவலர் நியமிக்க வேண்டும் முக்கியமாக இரவு நேரங்களில் காவலர்கள் நியமித்து கண்காணிக்கப்பட வேண்டும். (60 வயதுக்கு மேற்பட்ட வயதான வர்களை தவிர்க்க வேண்டும்).

    அனைத்து வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் கண்டிப்பாக பெயரளவுக்கு இல்லாமல் தரமான சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும். கேமரா நல்ல நிலையில் இயங்கு கிறதா என அடிக்கடி சரிபார்க்க வேண்டும். வங்கி மற்றும் ஏடிஎம் நோக்கியபடி எதிரே வெளியில் இருந்து கண்காணிக்கும்படி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

    அடிக்கடி வரும் நபர்கள் சந்தேகப்படும்படி தெரிந்தால் அந்த நபரை புகைப்படம் எடுத்தும், அந்த நபரை குறித்து உடனடியாக அருகிலுள்ள சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். நெடுநேரம் வங்கிக்குள் அமர்ந்து உள்ளவர்களை கண்காணித்து அவர்களை அப்புறப்படுத்திட வேண்டும். வங்கிக்குள் எச்சரிக்கை அலாரம் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். ஏடிஎம் வங்கிக்குள் செக்யூரிட்டி அலாரம் இணைக்கப்பட வேண்டும்.

    போலீஸ் நிலையத்துடன் நேரடியாக இணைத்திட வேண்டும். ஏ.டி.எம். வங்கி போலீஸ் நிலையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள ஏதுவாக ஹாட் லைன் இணைக்கப்பட வேண்டும் என பேசினார்.

    • ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது38). இவர் 7 வயது பேரனுடன் தெப்பம் கிழக்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றுள்ளார். இவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துத்தருமாறு கூறினார். அப்போது பேரன் வாந்தி எடுத்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு பேரனை வெளியே அழைத்துச்சென்றார். ஏ.டி.எம். கார்டை திரும்ப பெற மறந்து விட்டார். இந்த நிலையில் அவரது செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக 2 முறை குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து செல்லம்மாள் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது பல தவணைகளில் ரூ.41 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் செல்லம்மாள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லட்சக்கணக்கில் பணம் தப்பியது
    • வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவை :

    கோவை சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று இரவு இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பணம் எடுக்க முடியாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். மறுநாள் பணம் எடுப்பதற்காக சென்ற வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.டி.எம் மையத்துக்கு வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பணம் கொள்ளை போகவில்லை என்பதும், ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்கமுடியாமல் மர்ம நபர்கள் விட்டு சென்றதால், லட்சக்கணக்கில் பணம் தப்பியதும் தெரியவந்தது.

    இது குறித்து வங்கி அதிகாரி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு ஏமாற்றிய மர்மநபர்கள்
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரூ.23 ஆயிரம் பணத்தை நூதனமுறையில் திருடிய 3 பேரை நகர போலீசார் கைது செய்தனர்.

    வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள பொதுதுறை வங்கியின் ஏடிஎம் மையத்தில் வாணியம்பாடியை சேர்ந்த ரங்கநாதன் (55) என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் ரங்கநாதனிடம் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரங்கநாதனின் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அவர் சென்றவுடன் மர்மநபருடன் வந்திருந்த மேலும் 2 பேர் சேர்ந்து ரங்கநாதனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்த 23 ஆயிரம் பணத்தை எடுத்து நூதன முறையில் எடுத்தனர்.

    இதுகுறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி ரங்கநாதனிடம் நூதனமுறையில் பணத்தை திருடிய உதயேந்திரம் புதுமனை தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (39), இளையநகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28), தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (30 ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களி டமிருந்து 5 ஏடிஎம் கார்டுகள், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.9500 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×